யோனிப் பொருத்தம் என்றால் என்ன?
திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் ஆகும். திருமணத்தின் முக்கிய குறிக்கோளே வம்சத்தை விருத்தி செய்வது ஆகும். ஆண், மற்றும் பெண்ணின் தாம்பத்திய வாழ்க்கை, திருப்தி நிலை, சுகம் இவற்றை முடிவு செய்வதே யோனி பொருத்தம் ஆகும். இல்லற சுகத்தை அடிப்படையாக கொண்ட இந்த யோனி பொருத்தம் இருந்தால் மட்டுமே வாழ்க்கை என்றும் இனிக்கும்.
பொருத்தம் பார்க்கும்போது சில பொருத்தங்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று ஜோதிடர்கள் கூறுவார்கள். ஆனால் அதில் யோனிப்பொருத்தம், ரஜ்ஜுப்பொருத்தம் மட்டும் விதிவிலக்கு. இந்த இரு பொருத்தமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.
யோனி பொருத்தம் எவ்வாறு பார்க்க வேண்டும்?
யோனிப் பொருத்தம் என்பது ஆண், மற்றும் பெண்ணின் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறையாகும். 27 நட்சத்திரங்களும் 14 மிருகங்களாக பிரிக்கப்பட்டு அதில் ஆண்-பெண் என வகைபடுத்தபட்டு உள்ளது. அந்த மிருகங்கள் குதிரை, யானை, ஆடு, சர்ப்பம், நாய், பூனை, பசு, எருமை, புலி, மான், குரங்கு, சிங்கம், கீரி என்று 13 மிருகங்களுக்கு 27 நட்சத்திரத்தை பிரித்திருக்கின்றார்கள்.
சுக்கிர நீதி, சுக்கிர நாடி ஆகிய நூல்களில் பொருத்தம் பார்க்கும் போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 விதங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் உயிர் என்றால், ராசி உடலாகும். யோனிப் பொருத்தம் பார்க்கும் போது நட்சத்திரத்துடன் சேர்த்து ராசியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதில் உத்திராடம் நட்சத்திரத்திற்கு மட்டும் கீரி என்றும், சில நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண், பெண் பகை மிருகம் என்றால் மட்டுமே பொருத்தமில்லை என கொள்ளலாம். யோனிப் பொருத்தம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை மிருகமாக இருக்க கூடாது.
நட்சத்திரமும், அதற்குரிய மிருகமும்
ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும் பகைமிருகம் மற்றும் அதற்குரிய நட்சத்திரம் வைத்திருக்கின்றார்கள். அந்த வலையில் அஸ்வினிக்கும் சதயத்திற்கும் எருமை பகை. அஸ்வினி, சதயத்திற்கு – சுவாதியும் அஸ்தமும் பகை நட்சத்திரங்கள். எனவே பொருந்தாது.
அஸ்வினி – ஆண் குதிரை
பரணி – ஆண் யானை
கார்த்திகை – பெண் ஆடு
ரோகிணி – ஆண் நாகம்
மிருகசீரிடம் – பெண் சாரை
திருவாதிரை – ஆண் நாய்
புனர்பூசம் – பெண் பூனை
பூசம் – ஆண் ஆடு
ஆயில்யம் – ஆண் பூனை
மகம் – ஆண் எலி
பூரம் – பெண் எலி
உத்திரம் – பெண் எருது
அஸ்தம் – பெண் எருமை
சித்திரை – பெண் புலி
சுவாதி – ஆண் எருமை
விசாகம் – ஆண் புலி
கேட்டை – ஆண் மான்
மூலம் – பெண் நாய்
பூராடம் – ஆண் குரங்கு
உத்திராடம் – கீரி, மலட்டு பசு
திருவோணம் – பெண் குரங்கு
அவிட்டம் – பெண் சிங்கம்
சதயம் – பெண் குதிரை
பூரட்டாதி – ஆண் சிங்கம்
உத்ரட்டாதி – பெண் பசு
ரேவதி – பெண் யானை
எதனுடன் எதை சேர்க்கலாம்
நாய்க்கு பூனை பகை. சிங்கம், மற்றும் புலிக்கு ஆடு, பசு, மான், எருது, குதிரை, யானை பகை. பாம்புக்கு எலி பகை. எலிக்கு, கீரி பகை. குரங்குக்கு, ஆடு பகை. தாவர உண்ணிகளை தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம். மாமிச பட்சிகளை, மாமிசபட்சிகளோடு சேர்க்கலாம். பகை மிருகங்களுடன் சேர்க்க கூடாது. அப்படி சேர்த்தால் கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படாமல் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.
யோனி பொருத்தம் பார்க்கும் போது ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகமும் வந்தால் உத்தமமான பொருத்தம். பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகமும் வந்தாலும் உத்தமமான பொருத்தம். ஆனால் பகை மிருகத்தை மட்டும் சேர்க்கக் கூடாது.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.