விருச்சிக ராசி குணங்கள்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம், அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. இவர்களுக்கு எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அவர்களே அவர்களை தேற்றிக் கொள்வார்கள். பதுங்கிப் பாயும் புலியைப் போன்றவர்கள் இவர்கள்.
பூமிகாரகரான செவ்வாய் இவர்களின் ராசி அதிபதியாக வருவதால் சிறிய அளவிலாவது இவர்கள் பெயரில் சொத்து எப்போதும் இருக்கும்.. இவர்களின் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமான 6-ம் இடத்துக்கு அதிபதியும் செவ்வாய் என்பதால், பலருக்கு ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இவர்களுடைய பேச்சே இவர்களுக்கு எதிரி.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் இருப்பார்கள். பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் ஆனால் கோபம் வந்துவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லாமல் சட்டேன்று வார்த்தையை விட்டு விடுவார்கள். இவர்கள் மாநிறமாகவும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். இவர்களின் நடை, உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் இறுதியில் வெற்றி பெறுவார்கள். பண வசதியைப் பொறுத்தவரை தேவையான அளவுக்கு இருக்கும். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பூர்வீக சொத்துக்களை விற்றாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள்.
விருச்சிக ராசிகாரர்கள் நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேள் போன்ற குணம் கொண்டவர்கள் என்பதால், குறும்புத் தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.
இவர்களின் 2-ம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு அதிபதி குரு பகவான் ஆவார். வாழ்க்கையின் பிற்பகுதியில் பணவரவு, சேமிப்பு போன்றவை உண்டு. இவர்களின் வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் 7-ம் இடத்துக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், இவர்களுடைய வாழ்க்கைத் துணைவர் ஏதேனும் ஒரு வகையில் பிரபலமாக இருப்பார். கலைகளில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார். இவர்களிடம் மிகுந்த அன்போடு இருப்பதுடன், ஒரு நண்பரைப்போல் பழகுவார்.
இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
இவர்களின் ராசிக்கு சயன ஸ்தானம் என்னும் 12-ம் இடத்துக்கும் சுக்கிரனே அதிபதி என்பதால், நான்கு நாட்கள் வேலை செய்தால் இரண்டு நாட்கள் சுகமாக இருக்க விரும்புவார்கள். அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வருவார்கள். பயணங்களை விரும்பும் இவர்கள் அதற்காகவே பணம் சேர்ப்பார்கள். விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சமுக சேவைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். அதே போல தான தர்மங்கள் செய்வதிலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. இளமையில் கஷ்டமான வாழ்க்கை அமைந்தாலும் நடுத்தர வயதில் சுக போகமான வாழ்கை வாழ்வார்கள்.
சொந்த வீடு இருந்தாலும் அது பழைமையானதாக இருக்கும். அல்லது மற்றவர்களின் சொத்தாக இருக்கும். ஆனால் தக்க வயதில் வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளும், ஒரு சிலர் பசு, கன்று போன்றவற்றையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள். அயல்நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை. அப்படியிருந்தாலும் அதனால் பண விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலையானது இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாராள தன வரவு உண்டாகும்.
விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்
விருச்சிக ராசிக்கு அதிபதியாக செவ்வாய் இருப்பதால், ஞானியர்களையும், மகான்களையும் தரிசித்து வணங்குவது நலம். மேலும், செவ்வாய்க்கு எதிர் குணங்களைக் கொண்ட அனுஷத்துக்கு அதிபதியாக சனியும், கேட்டைக்கு அதிபதியான புதனும் வருவதால், நன்றாக சுகபோகங்களுடன் வாழும்போதே வாழ்க்கையின் நிலையாமை குறித்தும் சிந்திப்பீர்கள். காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் சுற்றித் திரியும் சித்தர்கள் என்றால், இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
அப்படி ஜீவசமாதி அமைந்திருக்கும் தலம்தான் நெரூர். இந்தத் தலத்தில் உள்ள சிவாலயத்துக்குப் பின்புறம்தான் சதாசிவ பிரம்மேந்திரர் என்னும் மகாஞானியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. மிகப் பழைமையான தலங்களையும், அங்கிருக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் தரிசித்து வழிபடுவது நல்லது.
உங்கள் ராசியில் சந்திரன் நீசமாவதால் சட்டென்று புத்தி வேலை செய்யாது. திடீரென்று பிரச்னை வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பீர்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எல்லாம் இத்தலத்தை தரிசித்த உடன் நீங்கும். இத்தலம் கரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.