திருமண சடங்குகள்
திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இரு மனங்கள் இணைவது திருமணமாகும். திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் அத்தியாவசியமான ஒன்றாகும். திருமணம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு திருமணத்தில் செய்யப்படும் சாஸ்திர, சடங்களும் முக்கியமானது ஆகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு விதமான காரணங்கள் உண்டு.
திருமண நிகழ்வில் முக்கிய நிகழ்ச்சி மூகூர்த்த நேரத்தில் தாலி கட்டுவதாகும். இதனை ‘மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவார்கள். மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டியதும் அப்பெண்ணானவள் ‘சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதியை பெறுகிறாள்.
திருமண சடங்கில் குண்டத்தில் அக்னி வளர்ப்பதன் அர்த்தம், திருமணம் செய்யபோகும் இருவரும் ஒருவருக்கொருவர் உற்ற உறுதுணையாகவும், வாழ்வில் ஈருடல் ஓர் உயிராக அன்யோன்யமாகவும் இருப்போம். உனக்கு தெரியாமல் நானும், எனக்கு தெரியாமல் நீயும் தவறு செய்தால் இந்த நெருப்பானது நம் இருவரையும் சுடட்டும் என்பதாகும்.
இதுபோல் திருமணத்தின் போது பல்வேறு விதமான சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அவற்றில் முக்கியமான சில,
வாழைமரம் கட்டுதல்
நலுங்கு வைத்தல்
தாலி கட்டுவது
ஹோமம் வளர்த்தல்
மறுவீடு அழைத்தல்
கோவிலுக்கு அழைத்துச் செல்லுதல்
என ஒவ்வொரு சடங்குக்கும் ஏதாவதொரு காரணம் ஒளிந்துள்ளது. ஏனெனில் எந்த செயலும் காரணமில்லாமல் செய்யபடுவதில்லை.
பெண் பார்க்கும் படலம்
திருமண பேச்சு ஆரம்பிக்கும் போது நடக்கும் முதலும், முக்கிய சம்பிரதாயமான பெண் பார்க்கும் படலம் முதல் திருமணம் நடக்கும் வரை நல்ல நாட்களில் நடைபெற வேண்டும் என்பது சாஸ்திர சம்பரதாயங்களில் சொல்லப்பட்ட ஒரு முக்கிய தகவல் ஆகும். திருமணம் செய்து கொள்ள போகிறவர்களின் தாரபலம், திருமணம் போன்ற சுபகாரியம் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள் உள்ள நாளில் ராகு காலம், மற்றும் எமகண்டம் போன்ற அசுப நேரங்களை தவிர்த்து நல்ல நேரத்தில் பெண் பார்க்க செல்ல வேண்டும்.
திருமணப் பொருத்தம்
திருமணம் செய்வதற்கு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வயது மட்டும் முக்கியம் இல்லை, திருமணத்திற்கு தேவையான மன முதிர்ச்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆண், மற்றும் பெண் வீட்டாரின் மனம் ஒத்து, ஒரு நல்ல நாளில் ஜோதிடரை பார்த்து திருமணம் செய்ய போகும் இருவரின் ஜாதகம் பொருந்தியுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
நிச்சயதார்த்தம்
நிச்சயதார்த்தம் செய்ய போகும் நாளானது துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், கேந்திர கோணங்களில் பாவக் கிரகங்கள் இல்லாத லக்னமாக அமைய வேண்டும்.
பந்தக்கால் நடுவதற்கு ஏற்ற நாட்கள்
பந்தக்கால் நட துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திங்கள், ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அசுவினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் உள்ள நாட்களும், 1,4,7,10 ஆம் இடங்களான கேந்திர கோணங்களில் பாவக் கிரகங்கள் இல்லாத சுப லக்னத்தை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
திருமணம் செய்ய ஏற்ற நாட்கள்
திருமணம் செய்ய அசுவினி, புனர்பூசம், பூசம், சித்திரை, அவிட்டம், சதயம், ரோகிணி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகளும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய லக்னங்களும் ஏற்றவை.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.