திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?
திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம் என்பது தெரியாது. ஆனால் நம் முன்னோர்கள் ஏதோ ஒரு அர்த்தத்தோடு தான் ஒவ்வொரு சடங்கையும் வைத்துள்ளார்கள்.
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கை பந்தத்தை இணைத்து வைப்பது திருமணம் தான். திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு, மணமகன் தாலி கட்டுவது தான் முக்கிய நிகழ்ச்சியாகும். சுற்றமும், நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்த, பெரியோர்கள் முன்னிலையில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடப்படுகிறது. இவ்வாறு தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சு போடுவது எதற்காக என்று பார்க்கலாம்.
மூன்று முடிச்சு
இந்து மத சம்பிரதாயப்படி திருமணத்தின் ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.
தாலி கட்டும்போது போடப்படுகிற மூன்று முடிச்சு என்பது, விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை குறிக்கிறது.
இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாகவும், சிறந்த அறிவாளியாகவும் திகழ, படைக்கும் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, முதல் முடிச்சு போடப்படுகிறது.
குடும்பத்தைக் காப்பதற்கும், எளியவர்களுக்கு உதவி செய்வதற்கும் தேவையான செல்வச் செழிப்புடன் வாழ்வதற்காக, காக்கும் கடவுளான திருமாலையும், செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமியையும் வணங்கி இரண்டாவது முடிச்சு போடப்படுகிறது.
உலகம் அமைதியாக இருப்பதற்கு, எங்கும் தர்மம் நிலவ வேண்டும். அநீதிகளை எதிர்க்கவும், அக்கிரமங்களை தட்டிக் கேட்கவும், இன்னல்களிலிருந்து தன் குடும்பத்தை பாதுகாப்பதற்குமான துணிச்சல் வேண்டும் என்பதற்காக சிவபெருமானையும், வீரத்திற்கு அடையாளமாக பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சு போடப்படுகிறது.
தாலியின் மகத்துவம்
திருமணத்தில் தாலி கட்டும்பொழுது மாங்கல்யம் தந்துநானே என்ற சொல்லப்படுகிறது.
அந்த மந்திரத்தில் தந்து என்பது கயிறு என்று பொருள் கொடுக்கிறது. மஞ்சள் கயிற்றால் கட்டப் படும் தந்து என்று கூறுகிறார்கள். மஞ்சள் கயிற்றில் தாலி இருந்தால் தான் மங்களம் பிறக்கும்.வறுமையில் வாட கூடிய பெண்கள் கூட தங்க தாலியை அடகு வைத்து மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்து கொள்வார்கள்.
நவீன பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பொழுது அலர்ஜி ஏற்படுவதாக சொல்கிறார்கள்.ஆனால் அதற்கு தரமான மஞ்சள் நூலால் தாலி அணியும் பொழுது இந்த மாதிரி அலர்ஜி பிரச்சனைகள் வராது. பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் நூலில் தான் தாலியை அணிகிறார்கள்.
கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும் மஞ்சள் நூலில் தாலியை அணிந்தால் தான் அதற்கான மகத்துவம் கிடைக்கும். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்று முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.