தார தோஷம் என்றால் என்ன?
தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன் அல்லது மனைவி ஸ்தானத்திலோ அல்லது லாப ஸ்தானத்தையும் மற்றும் களத்திரகாரகனோடு எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை நபர்கள் அதில் சம்பந்தப்படுவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதைத்தான் தார தோஷம் என கூறுகிறார்கள் ஜோதிடர்கள்.
தார தோஷத்தை எவ்வாறு அறிவது?
ஒருவருடைய ஜாதகத்தில் 8 மற்றும் 9-ம் இடம் வாழக்கை துணைக்கான ஸ்தானம் ஆகும். அந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, சுக்கிரனை பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலோ அந்த ஜாதகம் தார தோஷம் கொண்ட ஜாதகமாகும். இந்த தார தோஷமானது நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளை கொண்டே இந்த ஜென்மத்தில் ஏற்படுகிறது.
தார தோஷம் என்ன செய்யும்?
தார தோஷம் உள்ள ஜாதகக்காரர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும். திருமணமானவர்களுக்கு தங்களின் துணையிடம் காரணமே இல்லாமல் கருத்து வேறுபாடு ஏற்படும். மேலும் திருமணமான சில நாட்களிலேயே விவாகரத்து ஏற்படும் என்பன போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
தார தோஷத்திற்கான பரிகாரம்
வாழை மரத்திற்கு தாலி கட்டுதல் :
வாழை மரத்திற்கு தெய்வீக குணமும், பெண்களின் குணமும் ஒருங்கே அமைந்து உள்ளது. அதனால்தான் வாழைக்கு தாலி கட்டினால் தார தோஷம் நீங்கிவிடும் என்று ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. வாழை மரத்தை ஒரு பெண்ணாக நினைத்து தாலி கட்டினால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்போது அதில் மண முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். ஒரு சிலருக்கு ஜாதகத்தில் இரண்டு திருமணம் நடைபெறும் அமைப்புகள் காணப்படும்.
இரு தார தோஷம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனை வணங்கி வந்தால் தார தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
தார தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள்
1. தார தோஷம் விலக புதுக்கோட்டை மாவட்டம் மூலங்குடியில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யலாம்.
2. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை எனும் கிராமத்தில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோவிலுக்கு தார தோஷமுள்ளவர்கள் வியாழன் தோறும் சாமியை வந்து தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும். தாலி பாக்கியம் கிட்டும். தார தோஷம் நீங்கும்.
3. ஜாதகத்தில் எந்தவிதத்தில் இருதார தோஷம் இருந்தாலும் அவர்கள் ஸ்ரீ ரங்க நாயகி ஸமேத ரங்கநாதரை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும்.