ஸ்ரீராமநவமி சிறப்புகள்
ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி நாளை 21.04.2021 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த விழா ஒரு நாள் மட்டுமல்லாது தொடர்ந்து பத்து நாட்களுக்கு விஷ்ணு ஸ்தலங்களில் கொண்டாடப்படுகிறது.
ராமர் ராம அவதாரத்தில் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்பதற்கேற்றார் போல் ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் உலகிற்கு வாழ்ந்து காட்டி ராம பக்தர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்கினார்.
ஸ்ரீராமநவமி என்று பெயர் வர காரணம்
ராமர் அவதரித்த நாளை நாம் ராமநவமி என்று அழைப்பதற்கு ஒரு காரணம் உண்டு. ‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள்.
இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் மஹாவிஷ்ணுவிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.
இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமநவமி வழிபடும் முறைகள்
ஸ்ரீராமநவமி அன்று வீடு, வாசல், பூஜை அரை அனைத்தையும் சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேகம் படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் பல்வேறு சிறப்புகள் உண்டாகும். ராமநவமி அன்று ராமரை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் ராம பக்தரான அனுமனை வழிபடுவதும் சிறப்பான ஒன்றாகும்.
சுவாமிக்கு நெய்வேத்தியமாக நீர்மோர், பானகம், பாயாசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் தீப ஆரதானை காண்பித்த பின்னர் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து நாமும் உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஸ்ரீராமநவமி அன்று அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று ராம பஜனைகள் நடைபெறுவதை கேட்கலாம். இறுதியாக ராமர், சீதா கல்யாண வைபோகத்தை கண்டுகளிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், திருமண வாழ்வில் சங்கடங்கள் உள்ளவர்கள் அனைவரும் திருக்கல்யாணத்தை கான வேண்டும். இதனால் திருமண தடைகள் அனைத்தும் தகர்ந்து விரைவில் திருமணம் நடைபெறும்.
அன்றைய தினம் ராம பக்த்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்து நீர்மோர், பானகம் கொடுப்பது சிறப்பாகும்.