Home ஆன்மிகம் கார்த்திகை சோமவார தரிசனத்தின் பலன்கள்

கார்த்திகை சோமவார தரிசனத்தின் பலன்கள்

கார்த்திகை சோமவார தரிசனத்தின் மகத்துவம் 

சிவபெருமானை தினந்தோறும் வழிபடுவது சிறந்தது தான் என்றாலும், சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை தினத்தன்று இறைவனை வணங்குவது பெரும் பாக்கியத்தை கொடுக்கும். தமிழில் திங்கட்கிழமை எனப்படுவதே, வடமொழியில் சோமவாரம் என்று அழைக்கபடுகிறது.

கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்று சிவனை  தரிசித்தால் தீராத பிரச்னைகளும் தீரும் என்பார்கள். குறிப்பாக, முதல் வார திங்கட்கிழமை தரிசனம் ஆயுளும் ஆரோக்கியமும் வழங்கும் என்றால். இரண்டாம் சோமவார நாளில் ஆலய தரிசனம் செய்தால் தீர்க்க முடியாத பணக் கடன்களும் பிறவிக் கடன்களும் தீரும் என்கின்றன ஞான நூல்கள்.

சோமவார விரதத்தின் மகத்த்துவம் சிவபெருமானுக்குரிய விரதங்களில், திங்கட்கிழமைகளில் கடைபிடிக்கப்படுகின்ற சோம வார விரதம் மிக சிறப்பானதாகும். அதிலும், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் கடைபிடிக்கப்படுகின்ற கார்த்திகை சோம வார விரதம் பல்வேறு புண்ணியங்களை கொடுக்கக்கூடியது என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது.

சோம வார விரதம் இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள் கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குவது மிக நல்லது.

இந்த சோம வார விரதத்தை ஒருவர் தனது வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தால் சிவபெருமானின் திருவடியை பெறுவதுடன், அளவில்லா செல்வவளத்தையும் பெறலாம். திங்கட்கிழமையன்று சிவபெருமானை வழிபடும்போது, ருத்ரம் சொல்வது பெரும் புண்ணியமாகும்.

சோமவாரத்தன்று அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வில்வம் சார்த்தி ஐந்தெழுத்து மந்திரத்தை கூறி வழிபட நல்ல பலன்கள் கிடைக்கும். சிவபெருமானின் அருளால் சிந்தையில் தெளிவையும், ஞானத்தையும் பெறலாம். சோமவார தினத்தில் சிவபெருமான் தரிசனம் சுபிட்சத்தை கொடுக்கும் என்பதால், அன்று, சிவ தரிசனம் செய்வது மிகவும் நல்லது.

சோமவார விரதம் தோன்றிய வரலாறு 

ஒரு முறை தட்சனின் சாபத்தால் சந்திரன் கொடிய நோயால் துன்பப்பட்டான். தன் சாபம் நீங்கி நோய் குணமாக சந்திரன், கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும் சிவபெருமானை நினைத்து விரதம் அனுஷ்டித்தான். அவனது விரதத்திற்கு மகிழந்த சிவபெருமான், அவனுக்கு தட்சனின் சாபத்திலிருந்து விமோசனம் அளித்தார். சிவபெருமானின் அருளால் நோய் நீங்கப் பெற்றதுடன் நவக்கிரகங்களில் ஒருவரானார்.

சந்திரன் பெயரால் தோன்றியதே சோமவாரம் (திங்கட்கிழமை) மற்றும் சந்திரன், சோம வார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் ஜடாமுடியில் இளம் பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான். இவ்வாறு சந்திரனை தனது முடியில் சூடி அருளிய சிவபெருமான் சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சோம சுந்தரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிதரர், சசி மௌலீஸ்வரர், சசிசேகரர் என்று வழிபடப்படுகிறார்.

‘சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று சந்திரன் வேண்டுதலுக்கு இணங்கி, சிவபெருமான் அவ்வாறே அருளினார். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் என்ற இடத்தில் சந்திரன் சிவபெருமானுக்கு சோம வார விரதம் இருந்து, அவர் ஜடாமுடியில் இளம் பிறையாக அமர்ந்தான் என்பது ஐதீகம்.

சோமவார விரதம் இருக்கும் முறை

சோமவார விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள் திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் எழுந்து, வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி, சிவன் படத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை சிவனுக்கு நைவேத்தியமாக படைத்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தல் வேண்டும்.

இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேளை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறந்தது. அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதத்தினை மேற்கொள்ளலாம்.  3 வேளையும் விரதம் இருக்க முடியாதவர்கள்  பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

அன்றைய தினம் முழுவதும் காலை முதல் மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் சொல்லி வர வேண்டும்.

மாலையில் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை நிறைவு வேண்டும்.

சோமவார விரதம் இருப்பவர்களுக்கு மங்காத செல்வம் கிடைப்பதுடன், பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

வீட்டில் தடைபட்டு வந்த மங்கல காரியங்கள் விரைவில் நடைபெறும்.

மேலும், வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்தையும் வழங்குவார்.

கணவன், மனைவி உறவில் ஏற்படும் விரிசல்கள் விலகி, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரமுடியும்.

தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம்.

இதுபோல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் கடைபிடித்து சிவபெருமானை வணங்குபவருக்கு சிவனின் ஆசி கிடைத்து, நினைத்தது நிறைவேறும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version