Home ஜோதிடம் திருமணம், சடங்குகள் ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன?

பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின் மாங்கல்ய பலத்தை இந்தப் பொருத்தம் பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் இந்த பொருத்தம் மிகவும் அவசியம்.

திருமண வாழ்வில் நீண்ட மற்றும் குறுகிய ஆயுளை ரஜ்ஜூ பொருத்தம் தான் தீர்மானிக்கிறது. இதை ‘சரடு பொருத்தம்’ என்றும் கூறுவார்கள். ஏனைய 9 பொருத்தமும் சரியாக அமைந்து இந்த ரஜ்ஜூ பொருத்தம் மட்டும் இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டார்கள். மற்ற பொருத்தங்கள் அதிகம் இல்லாமல் ரஜ்ஜூ பொருத்தம் மட்டும் பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜு வகைகள்

27 நட்சத்திரங்களும் ஐந்து வகை ரஜ்ஜூ க்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. அவை,
1. பாத ரஜ்ஜு (கால் பாத நட்சத்திரங்கள்)
2. ஊரு ரஜ்ஜு (தொடை உடைய நட்சத்திரங்கள்)
3. உதர ரஜ்ஜு (வயிறு உடைய நட்சத்திரங்கள்)
4. கண்ட ரஜ்ஜு (கழுத்து உடைய நட்சத்திரங்கள்)
5. சிரசு ரஜ்ஜு (தலை உடைய நட்சத்திரங்கள்)

ரஜ்ஜு பொருத்தம் எப்படி பார்ப்பது?

நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் அவனின் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகிணி, தலையில் மிருகசீரிடம் என நட்சத்திரங்களை ஏறுமுகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவைகளை ஆரோகணம் என்றும், கீழ்நோக்கி வருபவைகளை அவரோகணம் என்றும் சொல்வார்கள். அந்த வகையில் 27 நட்சத்திரங்களை கீழ்காணும் ரஜ்ஜு க்களாக பிரித்துள்ளார்கள்.

சிரசு ரஜ்ஜூ – மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

கண்ட ரஜ்ஜூ – ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை ஆரோகணம் கொண்டவை, திருவாதிரை, சுவாதி, சதயம் அவரோகணம் கொண்டவை.

உதர ரஜ்ஜூ : கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகியவை ஆரோகணம் கொண்டவை. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை அவரோகணம் கொண்டவை.

தொடை ரஜ்ஜூ – பரணி, பூரம், பூராடம் ஆகியவை ஆரோகணம் கொண்டவை. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை அவரோகணம் கொண்டவை.

பாத ரஜ்ஜூ – அஸ்வினி, மகம், மூலம் ஆகியவை ஆரோகணம் கொண்டவை. ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை அவரோகணம் கொண்டவை.

ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்து திருமணம் செய்து வைத்தால் அந்த பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

ஒரே ரஜ்ஜுவில் ஆரோகணம், அவரோகணம் என இரண்டு பிரிவுகள் உள்ளது. ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும் ஆரோகணம், அவரோகணம் வேறு வேறாக இருந்தால் திருமணம் செய்யலாம். இரண்டு ரஜ்ஜு வில் ஒன்று ஏறுமுகமாகவும், மற்றொன்று இறங்கு முகமாகவும், ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் அமைந்தால் அது உத்தமமான பொருத்தம்.

ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் இரண்டும் ஏறுமுக ரஜ்ஜூவாக அமைந்தால் ஓரளவு நன்மையே கிடைக்கும்.

இரண்டும் ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் இறங்கு முக ரஜ்ஜூ எனில் மத்திமமான பொருத்தம்.

ஆண், பெண் இருவரும் ஒரே ரஜ்ஜூ அதாவது சிரசு ரஜ்ஜுவாக இருந்தால் கண்டிப்பாக இணைக்கக்கூடாது. அதாவது செவ்வாயின் மூன்று நட்சத்திரங்களான மிருகசிரீஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களை ஒன்றாக இணைக்கக்கூடாது.

ஆண், பெண் ஒரே ரஜ்ஜூவாக அமைந்தால்

1. பாத ரஜ்ஜூ என்றால் ஒரே ஊரில், ஒரே இடத்தில் வாழ விடாமல் அலைய வைக்கும். ஒரே இடத்தில் தொழில் செய்பவர்களுக்கு தொழில் மாற்றம், இடமாற்றம், என பல பிரச்சனைகள் வரும்.

2. ஊரு ரஜ்ஜூ என்றால் தாம்பத்ய உறவில் சுகமான மனநிறைவு கிடைக்காது. பண நஷ்டம் உண்டாகும். அதனால் மன கசப்புகள் உண்டாகும்.

3. உதர ரஜ்ஜூ என்றால் புத்திர பாக்கியம் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும்.

4. கண்ட ரஜ்ஜூ என்றால் குறுகிய காலம் மட்டுமே மனவாழ்வு அமையும்.

5. சிரசு ரஜ்ஜூ என்றால் கணவனின் ஆயுள் பலம் குறையும்.

ரஜ்ஜு பொருத்தம் விதிவிலக்குகள்

ஒரு சில விதிவிலக்காக, ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்றாலும், மாங்கல்ய ஸ்தானம் நன்றாக இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். 7 மற்றும் 8ஆம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தாலும், சுப ஆதிபத்திய கிரகங்கள் இருந்தாலும், 7, 8ஆம் இடங்களை சுப கிரகங்கள் பார்வையிட்டாலும் ரஜ்ஜூ பொருத்தமே இல்லையென்றாலும் துணிந்து திருமணம் முடிக்கலாம். ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருந்தால் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version