நவகிரக தோஷம்
ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்தித்தே தீருவார். கிரக நிலைகள் நன்றாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால், கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றிருப்பவர்கள் பெரும்பாலான நேரங்களில் பல விதமான சொல்லான துயரங்கள் மற்றும் கஷ்டங்களை வாழ்க்கையில் அனுபவிப்பார்கள். ஜாதகத்தில் கிரகங்கள் சரியான இடங்களில் அமராமல் இருந்தால் நவகிரக தோஷம் ஏற்படுகிறது. நவகிரக தோஷங்கள் ஏற்பட முற்பிறவியில் செய்த கர்மவினைகளே காரணமாக அமைகிறது.
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் முதலில் அது எந்த மாதிரியான தோஷம் என அறிந்து கொண்டு அதற்கேற்ற தோஷா பரிகார முறைகளை செய்து கொண்டால் வளமான வாழ்வு வாழலாம். இந்த பகுதியில் நவகிரக தோஷங்களையும், அதற்கான பரிகார முறைகளையும் காணலாம்.
நவகிரக தோஷங்களும், அதற்கான பரிகாரங்களும்
சூரிய தோஷம் உள்ளவர்கள் :
முதலில் நவகிரகங்களுக்கு அருள்புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீபிராண நாதேஸ்வரரை வழிபட்டு பின்பு, சூரியனார் கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள சூரிய சக்கரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் சூரிய பகவானால் ஏற்பட்ட தோஷம் விலகும். சூரியனை வழிபடுவதாலும் இங்குள்ள நவக்கிரகங்களை வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
சந்திர தோஷம் உள்ளவர்கள் :
தாய்க்குப் பீடை நோய், மன நிலை பாதிப்பு, சந்திரன் ஜாதகத்தில் நீச்சம் மற்றும் மறைவு, பாவ கிரக சேர்க்கை ஜாதகத்தில் உள்ளவர்கள் திங்களூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் சந்திர தோஷம் நிவர்த்தியாகும். திங்கட்கிழமைகளில் அம்மனுக்கு பூஜை, அபிஷேகம் செய்து வழிபட்டாலும், சந்திரனால் ஏற்பட்ட தோஷம் விலகும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் :
ஜாதகத்தில் செவ்வாயால் பாதிப்பு, திருமணத்தடை, தொழில் தடைசிக்கல், வீடு மனை வாங்க, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் திசை நடைபெறும் காலங்களிலும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வழிபட்டால் கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும். மேற்கண்ட கோவிலுக்கு போகமுடியாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டிற்கு அருகிலுள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டால், செவ்வாய் பகவானால் ஏற்பட்ட செவ்வாய் தோஷம் நீங்கும்.
புதன் தோஷம் உள்ளவர்கள் :
குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டமின்மை, கல்வியில் தடங்கல்கள் ஏற்படும்போது திருவெண்காட்டில் புதன் வழிபட்ட ஸ்ரீவேதாரண்யேஸ்வரரை வழிபட்ட பின்பு, அங்கு உள்ள புத பகவானையும் வழிபட்டால் புதனால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். மேலும் புதன்கிழமைகளில் விஷ்ணு அல்லது பெருமாள் ஆலயங்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வந்தால் புதனால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
குரு தோஷம் உள்ளவர்கள் :
திருமணத்தடை, புத்திர தோஷம், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள் வியாழக்கிழமைகளில் ஆலங்குடி குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடலாம். மேலும் குரு பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்க, அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று, அங்கு வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி அல்லது நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வந்தால் குரு தோஷம் நீங்கும்.
சுக்கிர தோஷம் உள்ளவர்கள் :
சுக்கிர தோஷம் உள்ளவர்கள் கஞ்சனூரில் உள்ள மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக கருதி வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும். மேலும் திருநாவலூர் பார்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். சுக்கிர பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்க லட்சுமி தேவியையும், பெருமாளையும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி அர்ச்சனை செய்து வந்தால், சுக்கிரனால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.
சனி தோஷம் உள்ளவர்கள் :
ஒருவரின் ஜாதகத்தில் 71/2 சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும், அம்மனையும் வழிபட்டு பின்னர் சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் நீங்கும். மேலும் சனியின் பாதிப்புள்ளவர்கள் திருவாதவூர் சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட்ட வர வேண்டும். மேலும் சனி தோஷம் உள்ளவர்கள் அருகிலுள்ள சனீஸ்வரர் ஆலயம் சென்று சனிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வர சனி தோஷம் நீங்கும்.
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் :
பஞ்ச லிங்கங்களில் ஒன்றான வாயு லிங்கம் அமைந்துள்ள திருக்காளஸ்த்தி கோவிலில் வீற்றிருக்கும் காளத்தீஸ்வரருக்கு ருத்ராபிசேகம் செய்து வழிபட்டு வந்தால் ராகு கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நீங்கும். மேலும் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஸ்ரீமத்ராமானுஜர் கோவிலில் நெய் தீபம் ஏற்றி, ஸ்ரீமத்ராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீதியாகராஜ நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் வழிபட்டு வர நாக தோஷம் நீங்கும். ராகு கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கையம்மனை வணங்கி வழிபட்டு வர வேண்டும். அல்லது விநாயகப் பெருமானை திங்கட்கிழமைகளில் வணங்கி வரலாம். இதன் மூலம் ராகு, கேது தோஷங்களால் ஏற்பட்ட கடுமை நீங்கும்.