திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதை போகிறபோக்கில் சாதரணமாக சொல்லிவிடவில்லை, அதற்கு பொருள் நிறைந்த ஆர்த்தம் உள்ளது. உதாரணத்திற்கு நெல், சோளம், பருப்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்தில் அறுவடைக்கு தயாராகி மகசூல் கொடுக்கும்.
ஆனால், திருமணம் என்பது எல்லா காலத்திலும், வரும் பிரச்சனைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் ஒரு பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். நம் முன்னோர்கள் வாழ்வியலை இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலங்காலமாக பலன் அளிக்கக்கூடிய ஒன்று. கணவன் – மனைவி இருவரும் அடுத்து வரும் ஜென்மங்களிலும் மனம் ஒத்து இணைபிரியாமல் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதை ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறினர்.
இதற்கு ஒரு பிரபலமான பாடல் உண்டு, அது
மணமகளே மருமகளே வா வா உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா வீட்டில்
குத்துவிளக்கேற்றி வைப்பாய் வா வா
இதில் இருந்தே குத்துவிளக்கு ஏற்றுவதன் அவசியத்தை உணரலாம்.
வீட்டிற்கு உள்ளே வந்து விளக்கு ஏற்றி வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. நம் முன்னோர் காலத்திலிருந்தே வலது கால் முன் வைத்து செல்வது சுபம் தரும் என்ற எண்ணம் உண்டு. திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள் முதன் முதலில் குத்துவிளக்கை ஏற்ற வேண்டும் என்று சொல்வது ஏன் தெரியுமா? குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்கள் முறையே அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிக்கிறது. மேலும் அது ஐந்து கீழ்கண்ட கடவுள்களையும் குறிக்கிறது.
தாமரைப் பீடம் – பிரம்மா.
நடுத்தண்டு பகுதி – விஷ்ணு.
நெய் எரியும் அகல் – சிவன்.
தீபம் – திருமகள்.
சுடர் – கலைமகள்.
எனவே, திருமணம் முடிந்து முதன் முதலில் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண் இந்த குத்துவிளக்கை போல ஐந்து வகை நற்குணங்களையும் நான் கொண்டிருப்பேன் என்று உறுதி செய்வதற்காக குத்துவிளக்கை ஏற்ற சொல்கிறார்கள்.
குத்துவிளக்கை ஏற்றிய பின், குத்துவிளக்கில் உள்ள ஐந்து தெய்வங்களையும் வணங்கி, விளக்கில் இருந்து வரும் ஒளியில் வீடு எப்படி பிரகாசம் அடைகிறதோ, அதேபோல் புகுந்த வீட்டில் வாழ வந்த பெண்ணின் வாழ்க்கையும் குத்து விளக்கை போல பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இணைந்ததுதான் திருமண வாழ்க்கை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். புரிந்து கொள்ளாதவர்கள் தோல்வி அடைகிறார்கள்.
கணவன், மனைவி உறவு என்பதே ஒரு நட்புதான். இந்த நட்பு வாழ்வில் சரியாக அமைந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்வில் ஊக்கம் தந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.