கந்தசஷ்டி விரதமிருப்பதன் நோக்கம்
முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் மிக முக்கியத்துவம் வயந்ததாக கருதப்படுகிற நிலையில், சஷ்டி விரதம் இருப்பது எதற்காக என்றும், அதன் பலன் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
சஷ்டி விரதத்தின் நோக்கம்
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி விரதம் இருக்க வேண்டும். சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுக பெருமான், அன்னையிடம் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரபத்ம சகோதரர்களை வதம் செய்து தேவர்களை காப்பாற்றினார்.
அத்துடன் சூரபத்மனை, தனது சேவல் கொடியாகவும், மயிலாகவும் ஆட்கொண்டருளினார்.
இவ்வாறாக அசுரனுக்கே சிறப்பும், பெருமையும் சேர்த்த முருகப்பெருமான், நம் மனதிலுள்ள தீய மற்றும் அசுர எண்ணங்களை அழிப்பதே கந்தசஷ்டி விரதத்தின் நோக்கமாகும்.
சஷ்டி விரதம் இருக்கு முறை
சஷ்டி விரதம் இருப்பவர்கள் அவரவர் உடல் நலனுக்கு ஏற்றவாரு விரதத்தினை மேற்கொள்ளலாம்.
காலை, மதியம், இரவு எதாவது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 2 வேளையும் சாப்பிடாமல் இருப்பார்கள். கடுமையான விரதம் மேற்கொள்பவர்கள், 3 வேளைகளிலுமே உணவையும் தவிர்த்து எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருப்பார்கள். இதற்கு பெயர்தான் பட்டினி விரதம் எனப்படும்.
கடவுளுக்கு அபிஷேகம் செய்த பாலை மட்டுமே ஒரு டம்ளர் குடித்து விரதம் இருப்பதற்கு பால் விரதம் என்பார்கள். மூன்று வேளையும், முற்றிலுமாக உணவை தவிர்த்து பால் மற்றும் பழங்களையும் சிலர் சாப்பிடுவார்கள்.
அதாவது காலையில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு ஆப்பிள், இரவில் ஒரு மாதுளை பழத்துடன் ஒரு டம்ளர் பால் குடித்து, இந்த விரதத்தை மேற்கொள்வர். அந்தவகையில், கடவுளுக்கு நைவேத்தியமாக படைத்த பால், பழங்களை மட்டுமே சாப்பிட்டு மேற்கொள்ளப்படும் விரதம் இதுவாகும். ஒரு நாளைக்கு ஒரு இளநீர் மட்டுமே குடித்து விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.
7 நாட்களும் விரதம் இருக்க முடியாத சூழலில் உள்ளவர்கள், மற்ற நாட்களில் உணவு எடுத்துக் கொண்டு, சூர்சம்ஹாரம் தினத்தன்று மட்டும் முழுவதுமாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் அன்று மாலை நிறைவடைந்த பிறகு இரவு உணவு சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்வர்.
இவ்வாறு முருகப்பெருமான் மீது கொண்ட அதிகப்படியான பக்தி மற்றும் நம்பிக்கையாலும் பக்தர்கள் இவ்வாறாக விரதத்தை மேற்கொண்டு முருகனின் அருளை பெற வேண்டுகிறார்கள்.
அதனால்தான், கந்தசஷ்டி விழா முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஸ்தலங்கள் அனைத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
குழந்தைப்பேறு
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள், விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டை கழுவி சுத்தப்படுத்தி, முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
கந்தசஷ்டியின் 6 நாட்களும், அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று கந்தசஷ்டி கவசம், கந்த புராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றை படிப்பது நல்லது.
முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுவதன் மூலமாக குழந்தைப்பேறு, வேலை வாய்ப்பு, தொழில் வளம் போன்றவை கிடைக்கும்.
மேலும், கண் திருஷ்டி, தீவினைகள் போன்றவை விலகி குடும்பத்தில் விருத்தி ஏற்படும். அத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் கிடைத்து, செல்வ வளம் அதிகரிக்கும்.