கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்
முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்த சஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.
சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
இந்த சஷ்டி விரதம் வீட்டிலும் கோவிலுக்கு சென்றும் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது.
வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று வரலாம். வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலைப் படிக்கலாம்.
இந்த விரதம் இருப்பதன் மூலம் முருகனிடம் நாம் வேண்டிய வரம் கிடைக்கும். நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேரும். சூரபத்மனை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டி அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் வெற்றியைப் பெறலாம்.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.
விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.