Home ஆன்மிகம் கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு 

காரடையான் நோன்பு என்பது அனைத்து சுமங்கலி பெண்களும் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்து தீர்க்க சுமங்கலியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் மகத்தான விரத நாளாகும்.

காரடையான் நோன்பு விரத முறை மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது. இன்று மாசி மாதத்தின் கடைசி னால் 14.03.2012 திங்கட்கிழமை இரவு காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த விரதம் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வடக்கில் சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. எந்தப் பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும் விரதம் இருப்பதின்  நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன் பூரண ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் விரதத்தின் நோக்கமாகும்.

இந்த நாளில் தான் சாவித்ரி இறந்த தன் கணவன் சத்தியவானை எமனிடம் போராடி மீட்பதற்காக விரதம் இருந்து தன் கணவனின் உயிரை திரும்ப பெற்றதாக நம்பப்படுகிறது. அதனால் தான் சுமங்கலி பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்கள் கணவர் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நோன்பு இருந்து வழிபடுகிறார்கள். இதனால் தான் இந்த நோன்பு சாவித்ரி நோன்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நோன்பு நாளில் கார் அரிசியினால் ஆன அடையை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டதால் காரடையான் நோன்பு என்ற பெயர் உண்டானது..

காரடையான் நோன்பு விரதம் இருக்கும் முறை

  1. சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதர்க்காகவும்,  திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்றும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
  2. பூஜை செய்யப் போகும் பெண்கள் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.
  3. மஞ்சள் , பச்சை , சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்திருப்பது சிறப்பு வாய்ந்தது.
  4. காரடையான் நோன்பு அன்று வீட்டினை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. பூஜை அறையில் கோலமிட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
  6. அம்பிகையின் படம் அல்லது திருஉருவச்சிலை இருந்தால் அதற்க்கு பொட்டு வைத்து பூ வைத்து  வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு வைக்க வேண்டும்.
  7. சரடு வைக்கும் போது வீட்டில் எத்தனை சுமங்கலிப் பெண்கள் இருக்கிறீர்களோ அத்தனை சரடும், அம்பிகைக்கும் சேர்த்து ஒரு சரடும் வைக்க வேண்டும் .
  8. ஒரு வாழை இலையில் நெய்வேத்தியமாக வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும்.
  9. அம்பிகைக்கு நெய்வேத்தியம் வைத்து ஆராதனை செய்த பின் வீட்டில் இருக்கும் முதிர்ந்த சுமங்கலிகள் ஒரு சரடினை எடுத்து அம்பாளுக்கு அணிவிக்க வேண்டும்.
  10. பின்னர் வீட்டில் இருக்கும் இளம் சுமங்கலிகளுக்கு கட்டி விட்டு பின் தானும் கட்டிக் கொண்டு அம்பிகையை வணங்க வேண்டும்.
  11. அப்போது “உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்’ என்று பெண்கள் வேண்டிக் கொள்வார்கள்.
  12. பின்னர் அம்பிகைக்கு நேவேத்தியமாக வைத்த அடையை வீட்டில் இருக்கும் அனைவருக்கு கொடுத்து தானும் சாப்பிட வேண்டும்.
  13. சில அடைகளை எடுத்து வைத்திருந்து மறுநாள் பசு மாட்டிற்கு கொடுப்பது சிறப்பு.
  14. இந்த நோன்பு இருக்கும் பழக்கம் இல்லாதவர்கள் மாசி மாதத்தில் ஏதாவது ஒரு  நல்ல நாளில் சரடை மாற்றி அணிந்து கொள்வது சிறப்பு வாய்ந்தது. மாசிக் கயிறு பாசி படியாது என்று ஒரு பழமொழி உண்டு.
  15. காரடையான் நோன்பு கடைபிடிப்பதால் பிரிந்த தம்பதியர் கூடுவார்கள், கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version