அழகான நகங்களை பெற
நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.
கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்ளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் குறைபாட்டினால் தான் நகங்களில் சொத்தை, நக சுத்தி போன்றவை ஏற்படுகிறது . நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதின் மூலமாகவும், சத்துக் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாலும் நகங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
நகங்களை பராமரிப்பது எப்படி ?
- கை மற்றும் கால்களில் நகங்கள் சிலருக்கு கடின தன்மையுடன் இருக்கும். நகத்தை வெட்டுவதும் கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகத்தினை வெட்டுவது சிறந்தது. குளித்தவுடன் நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால் எளிதாக வெட்ட முடியும்.
- நகத்தை வெட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தேங்காய் எண்ணெய் சிறிதளவு தடவி ஊறிய பின் நகத்தை வெட்டினாள் எளிதாக வெட்ட முடியும்.
- சமையல் செய்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், சாப்பிடுதள் போன்ற செயல்களுக்கு பின் நகங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சாப்பிட்ட பின் விரல் இடுக்குகளில் நகங்களில் சுத்தம் செய்வது நல்லது.
- பாத்திரம் கழுவுதல் , துணி துவைத்த பின் நகங்களில் சோப்பு துணுக்குகள் உட்புக வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு சோப்புகள் நகங்களில் இருந்தால் நாளைடைவில் நகம் சொத்தை பட்டு விடும். எனவே நகங்களை நன்றாக பிரஷ் வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
- நம் உடல் மற்றும் முகத்தில் வறட்சி ஏற்படுவதை போல நகங்களிலும் வறட்சி ஏற்படும். வறட்சி ஏற்படாமல் தடுக்க இரவு படுக்கும் முன் கை மற்றும் கால் நகங்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை நகத்தில் தடவி 2 நிமிடத்திற்கு மசாஜ் செய்து விட்டு படுக்கலாம். இதனால் நகங்கள் ஈரப்பதத்துடன் இருக்கும். இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
- மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
- நகங்களை வெட்டும் போது நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.
- நகத்தினை பற்களால் கடிக்கும் பழக்கம் மிகவும் தவறானது. இதனால் நகத்தில் உள்ள கிருமிகள் வாய் வழியாக சென்று பலவேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- நகங்களை வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் வெட்ட வேண்டும். நகம் வளர்க்க விரும்புபவர்கள் நகங்களை ட்ரிம் செய்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
- கழிவறை, குளியலறைகளை சுத்தப்படுத்தும் போதும் வீட்டை துடைக்கும் போதும் நாம் பயன்படுத்தும் சில கெமிக்கல் நிறைந்த பொருட்களால் பொருட்களால் நகங்கள் பாதிப்படையும். எனவே கைகளில் உறைகள் அணிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
- கற்றாழை ஜெல் 2 ஸ்பூன், கிளிசரின் 2 ஸ்பூன் எடுத்துக் கலந்து கை மற்றும் கால்களில் நன்றாக அப்ளை செய்துவிட்டு 10 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர நகங்கள் மற்றும் கை கால்கள் மிருதுவாக இருப்பதை நன்கு உணர முடியும்.
- பால் காய்ச்சும்போது அதில் இருக்கும் ஆடையை எடுத்து, கைகள் மற்றும் நகங்களில் அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் அதில் உள்ள எண்ணெய் பசையை உறிஞ்சி கைகள் ஈரப்பதத்துடன் இருக்கும்.