மின்சார விபத்து
மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில் மின்சார விபத்து ஏற்பட்டால் எப்படி கையாள்வது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
மின்சார விபத்துக்கான முதலுதவிகள்
மரத்தால் ஆன பொருளை உபயோகிக்கவும்
ஒருவர் மின் தாக்குதலுக்கு உள்ளானால் அவரை காப்பாற்ற போகிறவர்கள், முதலில் அவரை கண்டிப்பாக நேரடியாகத் தொட்டு விடக் கூடாது. மெயின் ஸ்விட்சை அணைத்து விட்டு மின் இணைப்பைத் முற்றிலுமாக துண்டிக்க வேண்டும். மின் இணைப்பை துண்டிக்க மரத்தாலான பொருட்களைத் தான் உபயோகப்படுத்த வேண்டும். ஏனெனில் மரக்கட்டை மின்சாரத்தை கடத்தாது.
தண்ணீர் இருக்க கூடாது
மின்சார விபத்துக்கு உள்ளனவரை சுற்றி தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தண்ணீரில் மின்சாரம் பரவும் வேகம் அதிகரிக்கும். மேலும் உயரமான இடங்களில் இருந்து மின் விபத்துக்கு உள்ளானவர் கீழே விழும்போது, கழுத்துப் பகுதியில் அடிபட வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான இடங்களில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரின் கழுத்து பகுதியை அசைக்காமல் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
சுய நினைவு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்
மின் விபத்துக்கு உள்ளனவருக்கு சுயநினைவு இருக்கிறதா? அவரால் எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா? இதையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும். மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தவர்கள், சுவாசிக்க மிகவும் சிரமப்படுபவர்கள், மேலும் நெஞ்சுவலி, படபடப்பு, தீக்காயம் போன்றவை ஏற்பட்டிருக்கும். எனவே மின்சார தாக்குதலுக்கு ஆளானவரை சீக்கிரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
சாப்பிட கொடுக்க கூடாது
பொது இடங்களில் யாராவது மின்சாரம் தாக்கப்பட்டு கிடந்தால், உடனே அவசர ஊர்தியை (Ambulance) வரவழைத்து மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க வேண்டும். மின்சார விபத்து ஏற்பட்டவருக்கு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு சீராக இல்லையென்றால், முதலுதவி செய்ய தெரிந்தவர்கள் நெஞ்சை அழுத்திவிடுதல் என்ற C.P.R. முதலுதவி சிகிச்சையை செய்வது அவசியம். மேலும் மின் விபத்து ஏற்பட்டு மயக்கமானவர்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருளால் சுவாசக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டு நிலைமை இன்னும் விபரீதமாகும்.
எந்த பொருளையும் கொடுக்கக் கூடாது
மின் விபத்து காரணமாக உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை துணியால் சுற்றக்கூடாது. தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைக்கலாம், மேலும் குளிர்ந்த நீரை மெதுவாக ஊற்றலாம். மின் விபத்தால் உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, இதயம், மூளை, சதைப் பகுதிகள் பாதிப்பு அடையும். கிட்னியும் பாதிக்கப்படலாம். மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. வலிப்பு ஏற்பட்டால், இரும்புப் பொருள் எதையும் கொடுக்கக் கூடாது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்
மின் விபத்து காரணமாக கை, கால்களை உதறும்போது கை, மற்றும் கால்களில் எலும்புகள் உடையாவே, சிராய்ப்புகள் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். மின் விபத்தால் பாதிக்கப்ட்டவரின் கை, கால்கள் இயல்புக்கு மாறான நிலையில் இருந்தால் அவை அசையாமல் இருக்கும்படி நீளமான பொருளுடன் சேர்த்து கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது நல்லது.
மின்விபத்தால் பாதிக்கப்பட்டவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக நேரத்தை வீணாக்காமல் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.