Home உணவே மருந்து மூலிகைகள் அதிமதுரம் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

அதிமதுரம்

அதிமதுரம் செடி வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். காடுகளில் புதர் செடியாக வளரும். மிதமான சீதோஷ்ணத்தில் வளரும். இது சுமார் 1.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலையைக் கொண்டது. ஊதா நிறமுடைய சிறு பூக்கள் தண்டின் கனுக்களில் காணப்படும். காய்கள் 3 செ.மீ.நீளமானவை. சிறு முட்களும் காணப்படும். வேர்கள் சிறிது பெரிதுமாக இருக்கும். உட்புறம் மஞ்சள் நிறமாகவும் வெளிப்புறம் பழுப்பு நிறமாகவும் காணப்படும். அதிமதுரத்தின் வேர்களே மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது.

அதிமதுரம் மருத்துவ நன்மைகள்

அதிமதுரம் என்ற பெயரிலேயே அதன் தனித்துவம் விளங்குகிறது. அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன் பொருள். இதன் வேர்கள் மிகுந்த இனிப்புச் சுவை கொண்டவை, மற்றும் குளிர்ச்சி தன்மை உடையவை. இது ஆங்கிலத்தில் ‘Liquorice’ என அழைக்கபடுகிறது. அதிமதுரம் இரண்டு வகைப்படும். அவை, சீமை அதிமதுரம், மற்றும் நாட்டு அதிமதுரம் போன்றவையாகும்.

சீமை அதிமதுரம் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இது வங்கதேசம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. நாட்டு அதிமதுரம் சிறிதாகவும், விரல் பருமனாகவும், ஒடித்தால் வெண்மையாகவும், சிறிது இனிப்பு மற்றும் வழவழப்பாகவும் இருக்கும். இதை ‘குன்றிமணி வேர்’ என்றும் அழைப்பார்கள்.

இனிப்புச் சுவையும், குளிர்ச்சி தன்மையும் கொண்டது அதிமதுரம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைவுப் பிரச்சனைக்கும் அதிமதுரம் மருந்தாகப் பயன்படுகிறது.

அதிமதுரத்தின் வேறு பெயர்கள்

அதிமதுரம் அஷ்டி, குன்றிவேர், இரட்டிப்பு மதுரம், அதிங்கம் போன்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது.

அதிமதுரம் மருத்துவப் பயன்கள்

வயிற்று பிரச்னைகளை போக்கும்

அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம், வயிற்று பெருமல் போன்றவை நீங்கும்.

நுரையீரலை சுத்தமாக்கும்

தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, வறட்டு இருமலை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தி சுத்தமாக்கும் தன்மை கொண்டது அதிமதுரம்.

உணவு செரிமானதிற்கு உதவும்

அதிமதுரம், வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. அதிமதுரத்தில் காணப்படும் பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிமானம் அடைய உதவுகிறது.

வழுக்கை தலையில் முடி வளர உதவும்

அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலுடன் சேர்த்து அரைத்து, அதனுடன் சிறிது குங்குமப்பூ போட்டு கலந்துகொள்ள வேண்டும். இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சில வாரங்களில் வழுக்கை தலையிலும் முடிகள் தோன்றும்.

சிறுநீர் மற்றும் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்தது

அதிமதுரச் சாறு அல்லது அதன் கஷாயமானது பேதி மருந்தாகவும், சிறு நீரகக் கோளாறுகளுக்கும், மார்பு மற்றும் வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

கண் பார்வை தெளிவாகும்

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு போன்றவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து, அதை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும். கண் பார்வை தெளிவடையும்.

துர்நாற்றத்தை போக்கும்

அதிமதுர இலையை அரைத்துப் உடலில் பூசிவந்தால் உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய முதல் நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

வறட்டு இறுமலை குணமாக்கும்

சூட்டினால் உண்டாகும் வறட்டு இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளம் சூட்டில் வறுத்து சூரணம் போல செய்து தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும்.

இரத்த போக்கு சரியாகும்

அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமமான அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு சரியாகும்.

சக்தியை அளிக்கும்

இளமையில் வாலிப சக்தியை இழந்த வாலிபர்களுக்கு அதிமதுரம் ஒரு அரு மருந்தாக பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டு வருகிறது.

வாய்புண்களை ஆற்றும்

அதிமதுரத்தின் வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தால் வாய்ப்புண்கள் ஆறும்.

கருப்பை கோளறுகளை நீக்கும்

அதிமதுரம், மற்றும் தேவதாரம் இவைகள் வகைக்கு ஒன்றாக 35 கிராம் அளவு எடுத்து அதை பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்களும் நிவர்த்தியாகும்.

வாயுபிடிப்பு, சுளுக்கு சரியாகும்

அதிமதுரத்து பொடியுடன் சிற்றாமணக்கு நெய்யை தடவி, குன்றி இலையை ஒட்டவைத்தால் பிடிப்பும், சுளுக்கும் குணமாகும்.

தலைமுடி பளபளக்கும்

அதிமதுரத்தைத் தூளாக்கி, அதை பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். தலையிலுள்ள புண்கள் குணமாகும். தலைமுடி ட்டுப் போல பிரகாசிக்கும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்

தாய்ப்பால் போதுமான அளவு இல்லாதவர்கள், ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தை, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

தலைசுற்றல் குணமாகும்

அதிமதுரத்துடன் தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு, கால் டீஸ்பூன் தேனில் குழைத்து, சிறிது சிறிதாக சாப்பிட தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை சரியாகும்.

உடல் சூடு தணியும்

சோம்பு மற்றும் அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். உள் உறுப்புகளின் சூடு தணிந்து, உடல் சுறுசுறுப்பாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version