அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்
கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்த பூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது.
முன்னோர்களின் பாரம்பரியம்
ஒரு மனிதன் முதல் திருமணத்தில் இல்லற வாழ்க்கைக்குள் நுழைகிறான். அன்று முதல் குடும்ப பொறுப்புகளை சுமக்கிறான். அதுபோல அறுபதாம் திருமணத்தில் இல்லறக் கடமைகளை நிறைவு செய்து துறவற வாழ்க்கைக்குள் நுழைகிறான். இவற்றை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியே அறுபதாம் திருமணம். இவற்றை திருக்குறளும் வலியுறுத்துகிறது.
அதாவது இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக் கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
மேலும், அதுவரை ஒரு பெண் மனைவியாக வந்து துணையிருந்து குடும்பத்தையும், பிள்ளைகளையும் தாங்கினாள். பிறகு குடும்பத்தை துறந்த பின் கணவர் துணை இருந்து தாங்க வேண்டும் என்பதே இதன் பாரம்பரியமாகும்.
வயதும், வாழ்க்கையும்
20 வயது வரை நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை.
20 – 40 வரை சிகரத்தை அடைய தொடத் துடிக்கின்ற வாழ்க்கை.
40 – 60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை.
60 க்கு மேல் தெளிவான , அமைதியான , பொறுப்புகளை முடித்து நிம்மதியான வாழ்க்கை.
60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்கியமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.
அறுபதாம் கல்யாணம் செய்யத் தவறினால் பெரிய தவறு ஒன்றும் நிகழப்போவதில்லை. நம்முடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய மனைவியின் தியாகங்களை எண்ணிப் பார்ப்பதற்காகவே இத்திருமணம் செய்யப்படுகிறது.