பெண்களின் வாழ்க்கை முறை
பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது, வீட்டை நிர்வகிப்பது என பல்வேறு பொறுப்புகளை சுமந்து செல்கின்றனர். அதிலும் வேலைக்கு செல்லும் சில தாய்மார்கள் அலுவலகம், வீடு ஆகிய இரண்டையும் நிர்வகிக்க வேண்டும். நிற்க நேரம் இல்லாமல் ஓடி ஓடி இவ்வளவு பொறுப்புகளையும் திறம்பட செய்ய பலருக்கு உடல் ஒத்துழைக்காது.
திருமணத்திற்கு முன் பெண்கள் தங்கள் அழகை பராமரிப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதிலும் காட்டும் அக்கறை திருமணத்திற்கு பின் படிப்படியாக குறைந்து விடுகிறது. அதிலும் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்து விட்டால் முழு நேரமும் குழந்தையை கவனிப்பதும், வீட்டு வேலை செய்வதும், சமையல் அறையிலுமே நேரம் போய்விடுகிறது.
இதனால் அவர்களுக்கு இரத்தசோகை, குறைந்த இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் குறைபாடு, மார்பக புற்று நோய், நீரிழிவு நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெண்கள் 30 வயதை கடக்கும் போது உடலில் பல்வேறு சத்து குறைபாடுகள் ஏற்படும். தினசரி வாழக்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதனை சரி செய்யலாம்.
வளர்சிதை மாற்றம்
30 வயதிற்குட்பட்ட பல பெண்களிடமிருந்து அடிக்கடி வரும் குற்றச்சாட்டு என்னவென்றால், உடல் எடை அதிகரித்துவிட்டது என்பது தான். ஆனால் அவர்களின் உணவு முறை எப்போதும் போலவே இருக்கும். 30 வயதுகளில் இது மிகவும் பொதுவான ஒரு பிரச்சனை. ஏனெனில் பெண்களுக்கு வயதாக ஆரம்பிக்கும் போது அவர்களின் வளர்சிதை மாற்றம் குறைகிறது.
எனவே பெண்களில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க அவர்கள் உணவில் புரதங்களின் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். அதிலும் ஒருவரது புரத உட்கொள்ளல் அவர்களின் எடைக்கு சமமானதாக இருக்க வேண்டும். எ.கா. – 60 கிலோ எடையுள்ள ஒரு பெண்மணி தினசரி 60 கிராம் புரதம் சாப்பிட வேண்டும். முட்டை, மீன், பருப்பு வகைகள், பீன்ஸ், சோயா போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மார்பக புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக,ப்ரோக்கோலி,க்ரீன் டீ சாப்பிடலாம். இதில், இந்தோல் 3 கார்பினோல் என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.
உடல் எடை
பெண்களுக்கு தேவையான சத்துக்களில் மிக முக்கியமான ஒன்று புரோட்டின். இது நம் உடலின் மெட்டபாலிசத்தை சரி செய்வதால் உடல் எடையை அதிகரிக்காமல் வைத்திருக்க முடியும் முட்டை,பீன்ஸ், நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதால், எடையை குறைக்கவும், சீராக வைத்துக்கொள்ளவும் முடியும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி சிறந்த வழிகளில் ஒன்றாகும். வாரத்தில் குறைந்தது 4 முறை 30 முதல் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யுங்கள்
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
ஒரு பெண் தனது 30 வயதை அடையும் போது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் அதிக ஃபைபர் கொண்ட உணவுகளை சாப்பிடுவது மிக அவசியம். எனவே உங்கள் அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும். நார்ச்சத்து பெற பழங்களை தினமும் அப்படியே சாப்பிட வேண்டும்.
ஹார்மோன் பரிசோதனை
பெண்களின் முப்பது ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு, மன அழுத்த அளவுகள் மாறுபடுவது, மோசமான உணவு பழக்கம் ஆகியவை மிகவும் பொதுவானது. எனவே வருடத்திற்கு இரண்டு முறையாவது ஹார்மோன் அளவை சரிபார்க்க இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன், கொழுப்பில்லா இறைச்சி, நட்ஸ் மற்றும் சாலட்டுகள் உள்ளிட்ட ஆரோக்கியமான சீரான உணவை உடற்பயிற்சியுடன் சேர்த்து சாப்பிடுவது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம்
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எலும்பு சார்ந்த பிரச்சனை இயல்பாகவே ஏற்படுகிறது. வயதுக்கு வரும்போது நமது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து எலும்பு அடர்த்தியை மோசமாக பாதிக்கும். இதுவே பெண்களுக்கு முழங்கால்கள், கீழ் முதுகு மற்றும் கால்களில் வலி மற்றும் உடல் வலிக்கு காரணமாக அமைகிறது. எனவே கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
பால், தயிர், பாதாம், கீரை, வெள்ளை பீன்ஸ்,கருப்பு உளுந்து மற்றும் மீன் ஆகியவற்றில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இத்துடன் உலர் திராட்சை, பாதாம் போன்றவற்றையும் சாப்பிடுவது நல்லது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல தூக்கம் மிகவும் அவசியமாகும். குறைந்தது 8 மணி நேரமாவது நல்ல ஆழ்ந்த தூக்கம் உடலுக்கு , மனதிற்கும் மிகவும் நல்லது.