குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்
செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி தேவியையே குறிப்பிடுகிறோம். செல்வத்தை வேண்டி மகாலட்சுமியை வணங்கும் போது அவருடைய பரிபூரண அருளை பெற்ற குபேரனையும் சேர்த்து வழிபடுவதால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வியாழக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். நிலைவாசலில் சந்தனம், மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் பூஜையறையில் குபேரர் படத்தை வைத்து, தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளதால் குபேர பூஜையின் பொழுது கட்டாயம் நெல்லிக்கனியை வைத்து வழிபட வேண்டும். அவலுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
வியாழக்கிழமை அன்று குபேர விளக்கு (அல்லது அகல் விளக்கு) மற்றும் மனை அல்லது தட்டிற்கு மஞ்சள், குங்குமத்தை ஒற்றைப்படையில் வைத்து அலங்கரித்து கொள்ள வேண்டும். குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டில் பச்சரிசியை பரப்பி, அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, பிறகு குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குபேரருக்கு உகந்த பச்சை நிற திரி கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
வடக்கு நோக்கி நிலைவாசலிலும் ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். குபேரனை வீட்டின் வாசலில் வைத்து பூஜித்தால், நமது செல்வத்திற்கு பாதுகாப்பும், செழிப்பும் உண்டாகும். குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு விளக்கு ஏற்றுவது சிறப்பானதாகும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் வீட்டு நிலை வாசற்படியில் இவ்வாறு வடக்கு திசை நோக்கி குபேர விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும், தொழில் வளர்ச்சி, லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நோய் நொடிகள் அகலும்.