காகம் உணர்த்தும் சகுனம்
காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.
காகத்தை நம் முன்னோர்களின் அம்சமாகவே கருதுகின்றனர். அதனால் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போதும், அமாவாசை அன்றும் காகத்திற்கு உணவளித்து பின் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
காகம் கரைவது முதல் எச்சம் இடுவது வரை அனைத்துமே சகுன பலன்களை சொல்லும் என்று நம்பப்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சகுன சாஸ்திரத்தில் பறவைகளில் காகத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது.
ஒருவருடைய பயணத்தின் போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால், பயணத்தின் போது அவருக்கு அதிக தீமையை முன் கூட்டியே அறிவுறுத்துவதாக அர்த்தமாகும்.
சில சமயங்களில் கண்டம் கூட ஏற்படும் என்பதை ‘காக்கைபாடினியார்’ எனும் சங்க காலப் புலவர் எழுதிய “சகுன சாஸ்திரத்தின்” மூலமாக அறிய முடிகிறது.
நீங்கள் வெளியில் எங்காவது செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நேரெதிரே நீங்கள் செல்லும் திசையை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் அந்தப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
பயணத்தின் போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் தருமாம்.
பயணிக்கும் அன்பரை நோக்கிக் காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்து விட வேண்டும் என்கிறது சகுன சாஸ்திரம்.
காகம் தன் குஞ்சுக்கு உணவு கொடுப்பது போல பார்க்க நேர்ந்தால் அது சுப சகுனம் ஆகவே கருதப்படுகிறது. நல்ல விஷயங்கள் உங்கள் வீட்டில் நடைபெறும் என்பதை குறிப்பதாகும்.
காகம் செய்யும் செயல்கள்
காரணமின்றிக் கரைந்து ஒலியெழுப்பும் காகம், பஞ்சம் வரப் போவதையும், காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும், இரவில் அசாதாரணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரும் வாய்ப்பு உள்ளது என்பதையும் சொல்லாமல் சொல்வதாகப் பொருள்.
காகங்கள் கூட்டமாக ஊரின் மேலாகப் பறப்பது அவ்வூருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும்.
உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரம் போன்ற ஏதாவது ஒரு பொருளை காகம் கொண்டு செல்ல நேர்ந்தால் அது அபசகுணம் ஆகும்.
காகம் கரையும் சகுனங்கள்
காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.
பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால் அந்த பயணத்தால் பலவிதமாக தன லாபம் ஏற்படும். வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால் பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது.
ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின் மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால் தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு என அறியலாம்.
காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்று சொல்லப்படுகிறது.
யாத்திரை புறப்படும்போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிட்டும். உதாரணமாக, சிவப்பு நிறப்பொருள் தங்கம் வகையிலான லாபத்தையும், வெண்ணிறப் பொருள் வெள்ளி லாபத்தையும், பஞ்சு போன்றவை வஸ்திர லாபத்தையும் குறிக்கும். இவ்வாறு உள்ள பொருட்களை அந்த இடத்திலிருந்து காகம் எடுத்துச்செல்வதுபோல் கண்டால், அந்தந்த வழிகளில் நஷ்டம் ஏற்படும். இத் தகவல் பக்ஷி சாஸ்திரத்தில் காணக் கிடைக்கிறது.
காகம் கரையும் திசைகளும் பலன்களும்
கிழக்கு திசை
அரசு வழி ஆதரவு பெருகும்
ஆபரண சேர்க்கை உண்டாகும்
நட்பு வட்டம் விரிவடையும்
நல்ல உணவு கிடைக்கும்
தென்கிழக்கு திசை
தங்கம் பெருகும்
வடக்கு திசை
வாகனத்தால் லாபம், வாகனச் சேர்க்கை உண்டாகும்
வஸ்திரத்தால் லாபமும், புது வஸ்திர சேர்க்கையும் உண்டாகும்.
தென்மேற்கு திசை
தயிரால் லாபம்
எண்ணெய் பொருட்களால் லாபம்
உணவுப் பொருட்களால் லாபம்
உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் மூலம் பெரும் அதிர்ஷ்டம் வரும்
மேற்கு திசை
நெல், தானியத்தால் லாபம்
முத்து பவளம் போன்றவற்றால் லாபம்
கடலில் இருந்து கிடைக்கும் பொருளால் லாபம் பெருகும்