லக்னம் என்றால் என்ன?
ஒருவரிடம் அவரின் ராசி எதுவென்று கேட்டால் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அவரின் லக்னம் என்னவென்று கேட்டால் திணறுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் ‘ல’ என்றும் ‘ராசி’ என்றும் ஜோதிடர்கள் குறிப்பிட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். ‘ல’ எனப்படுவது லக்னத்தை குறிக்கும். ராசியானது ஒருவரின் ஜாதகத்தின் உடல் என்றால் லக்னமானது உயிர் ஆகும்.
லக்னம் என்பது சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது. ராசி என்பது சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் வானில் எந்த ராசி உதயமாகி உள்ளதோ, அதாவது பூமியின் சுழற்சிப்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ, அந்த ராசி வீடே ‘லக்னம்’ எனப்படுகிறது.
லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை முழுமையாக அறிய முடியும். லக்னம் எனப்படும் இடம் தான் ஒரு ஜாதக கட்டத்தில் முதல் வீடு ஆகும். இதில் இருந்து தான் பன்னிரண்டு வீடுகளிலும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க முடியும். பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் ஒருவரின் வாழ்கையின் ஒவ்வொரு துறையையும் முடிவு செய்கிறது.
லக்னம் தான் ஒருவரின் ஆளுமை, சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவரின் வாழ்க்கையில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. ராசி என்பது லக்னத்துக்கு உறுதுணை செய்யும் ஓர் அமைப்புதான். லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றது. இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும். அப்போதுதான், அது முழுமையான ஜோதிடப் பலனாக இருக்கும்.
லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
நமது பூமியானது 360 டிகிரி அளவுகொண்ட வான்வெளி பகுதியாகும். அந்த வான்வெளியை 12 சம பங்குகளாக, அதாவது தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாக நமது ஞானிகள் மற்றும் ரிஷிகள் பிரித்துள்ளனர்.
இவை முறையே,
1. மேஷ லக்னம்
2. ரிஷப லக்னம்
3. மிதுன லக்னம்
4. கடக லக்னம்
5. சிம்ம லக்னம்
6. கன்னி லக்னம்
7. விருச்சிக லக்னம்
8. துலாம் லக்னம்
9. தனுசு லக்னம்
10. மகர லக்னம்
11. கும்ப லக்னம்
12. மீன லக்னம்
என்று அவற்றின் வடிவங்களை வைத்து 12 லக்னங்களாக பிரித்துள்ளனர்.
லக்னமானது தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி வரும். சூரியன் ‘மேஷ ராசி’யில் சஞ்சரிக்கும் போது சூரிய உதயத்தில் பிறப்பவர்களின் லக்னம் மேஷ லக்னமாக இருக்கும். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து பிறக்கும் குழந்தையின் லக்னம் ரிஷப லக்னமாக இருக்கும். இப்படி லக்னம் தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருக்கும்.