வியர்வை வாடையை தவிர்க்க என்ன வழி
நாம் என்னதான் தினசரி இரண்டு வேளை சுத்தமாக தேய்த்து குளித்தாலும் சில மணி நேரங்களுக்கு பின் வியர்வை வாடை வீச தொடங்கும். இதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வியர்வை நாற்றம் என்பது உடலில் சுரக்கும் ஒரு வித சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது. வியர்வையில் இருந்து வெளிவரும் துர்நாற்றமான வாசனையை உண்டு பண்ணுவது நமது உடலில் காணப்படும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் தான்.
பாக்டீரியாக்கள், நம் வியர்வையிலிருக்கும் கொழுப்பையும், புரதத்தையும் தனக்கான உணவாக எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு செய்யும்போது, வியர்வையின் மூலக் கூறுகள் உடைந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும் ரசாயனங்கள் வெளியாகின்றன.
உலகில், 98 சதவிகிதம் பேருக்கு வியர்வையில் நாற்றம் வருவது இயல்பு. இரண்டு சதவிகிதம் பேர் மட்டும்தான் இயல்பிலேயே வியர்வை நாற்றம் இல்லாமல் இருப்பார்கள்.
வியர்வை சுரப்பிகள்
பொதுவாக நம்முடைய சருமத்தில் இரண்டு விதமான வியர்வை சுரப்பிகள் உண்டு. ஒன்று எக்ரைன் என்றும் மற்றொன்று அபோக்ரைன் என்றும் அழைக்கப்படுகிறது. நமது உடலின் பல பகுதிகளில் முகம், கை, கால்,நெஞ்சு பகுதிகளில் சுரக்கும் சுரப்பி எக்ரைன் என்று அழைக்கப்படுகிறது.
அக்குள், நெஞ்சுப்பகுதி, பிறப்புறுப்பு பகுதியில் அபோக்ரைன் எனும் சுரப்பி சுரக்கிறது. இந்த இரண்டாவது சுரப்பி இருபாலருக்கும் பருவ வயதிற்கு பிறகு உண்டாவதால் குழந்தைகள் மீது துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
வியர்வை நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கான எளிய வழிமுறைகள்
தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது.
குளிக்கும்போது ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறை தண்ணீரில் கலந்து குளித்துவர கிருமிகள் அழிக்கப்படும்.
தினமும் இரவு நேரங்களில் படுக்கும்போது சந்தனத்தை நீர் விட்டு குழைத்து அக்குளில் தடவி விடுவதால் வியர்வை நாற்றம் மறைந்து சந்தனம் மணம் வீசும்.
மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் குளித்து முடித்த பிறகு கிழங்கு மஞ்சளை குழைத்து வீட்டில் இருக்கும் போது அல்லது இரவு நேரங்களில் தடவலாம். இவை வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாடையைக் குறைக்கும்.
குளிக்கும் நீரில் சிறிது நேரம் வேப்பிலையை போட்டு வைத்து பின்னர் குளிப்பது நல்லது. வேப்பிலை வியர்வை நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை விரட்டி அடிக்க பயன்படுகிறது.
கற்றாழையை தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் வியர்வை வாடை நீங்கும்.
குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும்.
வியர்வை வாடை வராமல் தவிர்ப்பது எப்படி ?
அசைவம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிகக்காரம் கொண்ட மசாலா உணவுகளையும் தவிர்க்கலாம்.
அதிக சூடான பானங்களை அல்லது உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதிக அளவில் உடலில் வியர்வை வரும் பட்சத்தில் வெந்நீரில் குளிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். குளிர்ந்த நீர் அல்லது மிதமான சூட்டில் உள்ள நீரை குளிக்க பயன்படுத்தலாம்.
எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அக்குளை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணியாமல் தளர்வான காற்று உள்ளே போகும் வகையில் பருத்தி ஆடைகளை அணியுங்கள்.