திப்பிலி
திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
திப்பிலியின் வேறு பெயர்கள்
திப்பிலிக்கு கோழையறுக்கி,சரம், சாடி, துளவி, மாகதி, கனை, ஆர்கதி, உண்சரம், உலவை நாசி, காமன், சூடாரி, கோலகம், கோலி, தண்டுலி, கணம், பாணம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து போன்ற வேறு பல பெயர்களும் உள்ளன.
திப்பிலி வளரியல்பு
திப்பிலி கொடி வகையைச் சார்ந்த ஒரு நீண்ட காலப் பயிராகும். இது இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். இதன் செடிகள் உறுதியான வேர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், நெருக்கமாகவும் இருக்கும். பூக்களில் உருவாகும் காய்கள் தான் மருத்துவத்தில் பயன்படுகிறது. திப்பிலியின் காய்கள் வெற்றிலைப் போன்ற காரத்தன்மையுடனும், வாசனையாகவும் இருக்கும். மிளகைக் விட திப்பிலியின் காய்கள் அதிக காரத்தன்மையோடு இருக்கும்.
திப்பிலியின் வணிக பயன்பாடு
திப்பிலி உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உலர்ந்த திப்பிலியிலிருந்து நீராவி வடிப்பு முறை மூலம் எண்ணெய் எடுக்கபடுகிறது. காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு. இந்திய மருத்துவத்தில் பல்வேறு நோய்களைத் எதிர்த்து போராடும் மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவத்தில் திப்பிலி
சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் சித்த மருத்துவத்தில் “திரிகடுகம்” என அழைக்கபடுகிறது. பச்சைத் திப்பிலி கபத்தை உருவாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றும். திப்பிலிக் காய்களில் பைப்பரின், லாங்குமின் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. மேலும் ரெஸின், புரதம், கொழுப்பு, தாது உப்பு, சுண்ணாம்பு, இரும்பு, தையமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உலர்ந்த காய்களில் 0.27 சதம் லாங்குமின் வேதிப்பொருள் உள்ளது. இது உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றப் போக்கு, தொழுநோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் திப்பிலி பயன்படுகிறது.
கண்ட திப்பிலி
திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், 3 வருடங்களுக்குப் பிறகு ‘கண்ட திப்பிலி’ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. திப்பிலியின் கனிகள், மற்றும் முற்றாத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித் திப்பிலி’ என்ற பெயரில் மருந்து பொருளாக பயன்படுத்துகிறார்கள். திப்பிலி நெடுங்காலமாக இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி,
இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு, காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் குணமாக்கும் போக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
திப்பிலியின் மருத்துவப் பயன்கள்
இளைப்பு நோயை குணமாக்கும்
திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும்.
வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும்
திப்பிலி, மிளகு, சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் போன்றவை குணமாகும்.
இரைப்பை வலுபெறும்
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு போன்றவை குணமாகும், இரைப்பை மற்றும் ஈரல் வலுப்பெறும்.
சுவாச பிரச்சனைகளை சரிசெய்யும்
திப்பிலி சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். தேனுடன் கலந்த திப்பிலி பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும்.
காய்ச்சல் குணமாகும்
குழந்தைகளின் குடலில் இருக்கும் புழுக்களை அகற்றும். மேலும் குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலிப் பொடியை கலந்து கொடுத்தால் ரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும்.
ஆண்மை அதிகரிக்கும்
பசுவின் பாலில் திப்பிலிப் பொடியை சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி போன்றவை நீங்கும். திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்.
செரிமான பிரச்சனைகள் தீரும்
திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டி எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமான திறன் அதிகரிக்கும்.
தோல் பிரச்சனைகளை தீர்க்கும்
திப்பிலி பொடியை ½ தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து 2 வேளை வீதம் 1 மாதம் சாப்பிட்டு வந்தால் வந்தால் தேமல் உள்ளிட்ட சரும பிரச்சனைகள் குணமாகும்.
கரும்புள்ளிகளை போக்கும்
திப்பிலி லேகியம் சுவாசம், வயிற்றுவலி, பெருவயிறு, ஜுரம், பாண்டு இவைகளை குணப்படுத்தும். திப்பிலி மூலமாக முகத்தில் உண்டாகும் கருத்த மச்சம், சிவப்பு மச்சம், கரும்புள்ளிகள் போன்றவை குணமாகும்.
உணர்வின்மையை போக்கும்
திப்பிலிப் பொடியை மிளகுடன் சேர்த்து பயன்படுத்தினால் மயக்கம் மற்றும் உணர்வின்மைகளில் உணர்வு தூண்டும் மூக்குப் பொடியாக செயல்படுகிறது.