சைனஸ் பாதிப்பிற்கான தீர்வுகள்
சைனஸ் என்றால் என்ன ?
சைனஸ் என்பது மூக்கின் இரு பக்கங்களிலும் சளி நிறைந்து இருப்பதே ஆகும். இது ஒரு விதமான ஒவ்வாமையாகும். அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்.மேலும் கண்ணுக்குக் கீழ், கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும்.
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிந்து சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது தீவிர நிலை அடையும் போது மூளைக்காய்ச்சல், மூளை அயற்சி போன்றவற்றிகு வழி வகுக்கும்.
சைனஸைத் தடுக்கும் வழிகள்
அசுத்தமான இடங்கள், தூசி அதிக அளவு நிறைந்துள்ள இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக கதவு தாழ்ப்பாள், கைப்பிடிகள் , கம்பிகள் ஆகியவற்றில் கை வைத்து விட்டு உடனே முகத்தைத் துடைக்கும்போதோ, மூக்கில் படும்போதோ தூசுகள் உள்ளே போக வாய்ப்புள்ளது. எனவே கையை அடிக்கடி சுத்தமாகக் கழுவ வேண்டும்.
பொதுவாக குளிர்காலங்களில் பாக்டீரியாத் தொற்று அதிகமாக இருக்கும். காலை நடைப்பயிற்சி செல்லும் பழக்கம் உள்ளவர்கள் ஸ்வட்டர் அணிந்து கொண்டு செல்வது நல்லது. சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை குளிர்சாதன அறையில் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டுவிட வேண்டும். மியூக்கோஸ் படலத்தை சிகரெட் புகை எளிதில் பாதிக்கும். இது அரிப்பு, எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு எளிதில் சைனஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்து அதிக காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
வறுத்த மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள், அரிசி, இறைச்சி மற்றும் காரசாரமான மசாலாக்கள் நிறைந்த உணவுகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உணவு முறைகளில் சில கட்டுப்பாடுகளை கடைப்டிப்பதின் மூலம் சைனஸ் தொந்தரவு ஏற்படுவதை தடுக்கலாம்.
பால் சார்ந்த பொருட்கள் குறிப்பாக சீஸ், தயிர் மற்றும் ஐஸ் க்ரீமை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சாக்லெட், வெள்ளை சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து தயாரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை
சைனஸ் பிரச்சனையை உள்ளவர்கள் அடிக்கடி ஆவிபிடிப்பதின் மூலம் நல்ல நிவாரணத்தை பெற முடியும். கடைகளில் விற்கப்படும் ஆவி பிடிக்கும் மாத்திரைகளை தவிர்த்து வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி ஆவி பிடிப்பது நல்லது.
ஒரு பாத்திரத்தில் ஆவி பிடிக்க தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள், முருங்கை இலை, துளசி கற்பூர வல்லி இலை, நொச்சி இலை, கல் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கொதித்த பின் ஆவி பிடித்தால் சளி தொந்தரவு எளிதாக குறைந்து விடும்.
டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் டீயுடன் இஞ்சி தட்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் மூக்கடைப்பு, தொண்டை அழர்ச்சி, சைனஸினால் ஏற்படும் தலைவலி போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சுக்கை நன்றாக தட்டி காபியுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல நிவாரணம் ஏற்படும்.
மூக்கடைப்பு உள்ளவர்கள் சூப் வகைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. சிக்கன் சூப், மட்டன் சூப், காய்கறி சூப், மற்றும் மூலிகை சூப் போன்றவற்றை குடிப்பது நல்லது.
சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் சாதாரண தண்ணீர் குடிப்பதை தவிர்த்து எப்போதுமே வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.