சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு
சதாவரி என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம் ஆகும். இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை வடமொழியில் சதாவரி என்று அழைக்கிறார்கள். நம் ஊர்களில் இதை “தண்ணீர் விட்டான்” என்ற பெயரில் அழைக்கின்றனர். தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு நம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இது நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.
இந்த தண்ணீர் விட்டான் கிழங்கிற்கு பல்வேறு நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதால் வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப் பொருள்படும் வகையில் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து) எனப் பெயரிட்டுள்ளனர். நாட்டு மருத்துவத்தில் இது மூலிகை மருந்தாக பயன்படுகிறது. இந்த மூலிகையை பொறுத்தவரை இது உலகம் முழுவதிலும் பயிரிடப்படுகிறது. அதிலும் இந்தியாவை பொறுத்தவரையில் அனைத்துப் பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது.
சதாவரியின் வேறு பெயர்கள்
இதற்கு சாத்தாவாரி, சதாவேரி, நீர்வாளி, நீர்விட்டான், வரிவரி, சதாமூலம், தண்ணீர் விட்டான், நாராயண முலி, சதாவேலி, சதமுலை,உதக மூலம், சீக்குவை, பறனை, பீருதந்தி என வேறு பல பெயர்களும் உள்ளன. இதன் தண்டு, வேர், இலை, கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாகும்.
சதாவரியின் வகைகள்
சதாவரியில் மகா சதாவரி, சிறு சதாவரி என்ற இரு வகைகள் உண்டு. இதில் சிறு சதாவரி மலத்தை இளக்கி வெளியேற்றும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இது இனிப்புச் மற்றும் கசப்பு சுவையையும் ஒருங்கே கொண்டதாகும். மகாசதாவரி மூன்று நாடிகளையும் சமமாக்கி அதன் மூலம் எண்ணற்ற நோய்களை சரி செய்யும்.
சதாவரி மருத்துவப் பயன்கள்
மாதவிடாய் இரத்தபோக்கை கட்டுபடுத்தும்
சில பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிகபடியான இரத்தப்போக்கு ஏற்படும். இதற்க்கு அவர்கள் சதாவரி அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கை மாதவிடாயின் போது உபயோகித்தால் அதிகப்படியான இரத்தப்போக்கு கட்டுப்படுத்தபடுகிறது.
தாய்பால் சுரப்பை அதிகரிக்கும்
ஒரு சில பெண்களுக்கு குழந்தை பிறந்த சில நாட்களுக்கு பிறகு தாய்பால் சுரப்பு குறைகிறது. இதனால் அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான பால் கொடுக்க முடியாமல் போகிறது. இவர்கள் சதாவரி அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்தினால் தாய்பால் சுரப்பு அதிகமாகும்.
சிறுநீர் பிரச்சனைகளை தீர்க்கும்
சதாவரி அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கை ஆண், பெண் இருபாலரும் பயன்படுத்தினால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் குணமாகும். நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
மலத்தை இளக்கி வெளியேற்றும்
சதாவரி இறுகிய மலத்தை இளக்கி வெளியேற்ற கூடியது. மேலும் ரத்தத்தை சுத்திகரித்து நல்ல தூக்கத்தை தரக் கூடியது. குடல் வலி, வயிற்றுப் போக்கு, பசியின்மை போன்ற அனைத்தையும் குணமாக்க கூடியது.
காய்ச்சலை குணமாக்கும்
இது வெள்ளை வெட்டு நோய் தொந்தரவுகளில் இருந்து நம்மை காக்கும். பித்தம், எலும்புருக்கி நோய், நாள் பட்ட காய்ச்சல் ஆகிய அனைத்துப் நோய்களையும் குணமாக்கும்.
ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்கிறது
ஹார்மோன் பிரச்சினைகளினால் பெண்களுக்கு உடல்பருமன், மாதவிலக்கில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அப்படியானவர்கள் இதை சாப்பிட்டால் கருப்பை பலமாகும். கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்கின்றது.
வயிற்று புண்களை ஆற்றும்
இது உடல் உள்உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்களை ஆற்றுகிறது. அல்சர் போன்ற வயிற்றுப் புண்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு மிகச்சிறந்த மருந்து ஆகும்.
பாலுணர்வை தூண்டுகிறது
சதாவரியுடன், வால் மிளகு, தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பயன்படுத்தும்போது அது பாலுணர்வை தூண்டுகிறது.
எலும்பு நரம்பு பிரச்சனைகள் குணமாகும்
சதாவரி தைலம் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் எலும்புகள் சம்பந்தப்பட்ட வலிகளையும் தீர்க்கிறது.
உடல் சோர்வு நீங்கும்
சதாவரி வேர்த்தூளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வந்தால் சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.