புத்திர தோஷம் என்றால் என்ன
நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. முன்னோர்களுக்கு முறையாக ஈமக்கடன்கள் செய்யாமல் இருந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும் என கூறப்படுகிறது.
முற்பிறவியில் ஆன்மீகவதிகள், அடியார்கள், மகான்கள் போன்றோரை மதிக்காமல் அவமானப்படுத்தியிருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். அந்தணரைக் கொன்றாலோ, குல தெய்வக் குற்றத்தாலோ, மரங்களை காரணமின்றி வெட்டியிருந்தாலோ புத்திர தோஷம் ஏற்படும். புத்திர தோஷம் ஏற்பட்டால், பிறக்கும் குழந்தை உடல் வளர்ச்சியற்ற குழந்தையாகவோ, உடல் ஊனமுற்ற குழந்தையாகவோ பிறக்கும், அல்லது குழந்தை பாக்கியமே இருக்காது.
புத்திர தோஷத்தை எவ்வாறு கண்டறிவது
புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு ஜாதகத்திற்கும் மற்றும் லக்னத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5-ம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். ஆண், பெண் இருவருக்கும் திருமணதிற்கு நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பது போது ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என அலசி ஆராய்வது அவசியம். புத்திரஸ்தானமான 5-ம் இடம் பாதிக்கப்பட்டால், குழந்தை பேறு உண்டாவதில் பலவித தடைகள் ஏற்படும்.
புத்திரதோஷமானது ஒவ்வொரு லக்னத்துக்கும் எந்த எந்த கிரகங்களால் ஏற்படுகிறது என்பதைப் பின்வருமாறு பார்ப்போம்.
லக்னப்படி புத்திர தோஷம்
மேஷ லக்னம்
மேஷ லக்னத்திற்கு 5-ம் இடம் சிம்மம். சிம்மத்தின் அதிபதியான சூரிய பகவான் கன்னி, துலாம், விருச்சகம், மீனம் போன்றவற்றில் இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும்.
ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்திற்கு 5-ம் இடமான கன்னி. கன்னியில் சுக்கிர பகவான் இருந்தாலும், மேலும் புதன் துலாம், மேஷம், தனுசில் இருந்தாலும் புத்திர தடை ஏற்படும்.
மிதுன லக்னம்
மிதுன லக்னத்திற்க்கு 5-ம் இடம் துலாம். துலாமின் அதிபதி சுக்கிரன் பகவானவார். சுக்கிரன் 5-ம் இடமான கன்னியில் இருந்து, துலாமில் சூரியன் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.
கடக லக்னம்
கடக லக்னத்தின் 5-ம் இடம் விருச்சகம். லக்னாதிபதி விருச்சகத்தில் இருந்து, செவ்வாய் கடகத்தில் நின்றால் புத்திர தடை உண்டு. அதுமட்டுமல்லாமல் விருச்சகத்தில் புதன் இருந்து, கேது மற்றும் சனி போன்ற கிரகங்கள் இருந்தாலும் புத்திர தோஷம் உண்டாகும்.
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்தின் 5-ம் இடம் தனுசாகும். தனுசின் அதிபதியான குரு 6-ம் இடமான மகரத்தில் இருந்தாலும், 6-ம் இடத்திற்கு உரிய சனி பகவான் தனுசில் இருந்தாலும் புத்திர தோஷம் உண்டாகும்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்திற்கு 5-ம் இடம் மகரம். மகரத்தில் சனி இருப்பது தோஷமில்லை என்றாலும் சூரியனுடன் இணைந்து இருந்தால், 5-ம் இடமும் 5-ம் பாவாதிபதியும் கெடுகிறார், எனவே இதுவும் புத்திர தோஷ அமைப்பாகும்.
துலாம் லக்னம்
துலாம் லக்னத்திற்கு 5-ம் இடம் கும்பம். கும்பத்தின் அதிபதியான சனி பகவான் மேஷத்தில் இருந்து, கும்பத்தில் செவ்வாய் நின்றாலோ, சனி கன்னி ராசியில் இருந்து கும்பத்தில் குரு பார்வை செய்தாலோ, செவ்வாய் சிம்மத்தில் நின்று பார்த்தாலோ புத்திரதோஷம் ஏற்படும்.
விருச்சக லக்னம்
விருச்சக லக்னத்தின் 5-ம் இடம் மீனமாகும். மீனத்தில் சனி இருந்து, மகரத்தில் குரு சஞ்சாரம் செய்தால் தோஷம் ஆகும். மீனத்தில் குரு இருந்து மகரத்தில் சனி நின்றாலும், அது புத்திர தோஷம் கொண்ட அமைப்பாகும்.
தனுசு லக்னம்
தனுசு லக்னத்தின் 5-ம் இடம் மேஷ ராசியாகும். மேஷத்தின் அதிபதியான செவ்வாயுடன் சனி தொடர்பு இருந்தாலோ, செவ்வாய் 8-ம் இடத்தில், சனி 5-ம் இடமான மேஷத்தில் இருந்தாலும் அது புத்திர தோஷம் கொண்ட அமைப்பாகும்.
மகர லக்னம்
மகர லக்னத்தின் 5-ம் இடம் ரிஷபமாகும். ரிஷபத்தின் அதிபதியான சுக்கிர பகவான் கன்னியில் நீச்சமடைந்து, 5-ல் ராகு, கேது, சூரிய பகவான் போன்றோருடன் இணைந்து இருந்தால் அது புத்திர தோஷமாகும்.
கும்ப லக்னம்
கும்ப லக்னத்திற்கு 5-ம் இடம் மிதுனம். மிதுனத்தில் சந்திரன் இருந்து, மீனத்தில் புதனும் நின்று பாவ கிரகங்கள் பார்த்தால் புத்திர தடை ஏற்படும்.
மீன லக்னம்
மீன லக்னத்துக்கு 5-ம் இடம் கடகம். கடகத்தில் சூரிய பகவான் சஞ்சரித்தாலோ, சுக்கிரன், சனி போன்றவர்கள் சஞ்சரித்தாலோ புத்திரதோஷம் ஏற்படும்.
புத்திர தோஷதிற்க்கான பரிகாரம்
புத்திரதோஷம் உள்ளவர்கள் முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் பரிபூரண ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும். மேலும் முதியோர் இல்லங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவதால் அவர்களின் ஆசிபெற்று தோஷ நிவர்த்தி பெறலாம்.
வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்வதாலும், கோயில்களில் உழவாரப் பணி செய்வதன் மூலமும், ஏழை உடல் ஊனமுற்றோருக்கு தங்களால் முடிந்த தானம் செய்வதன் மூலமும் பரிகாரம் செய்யலாம்.
மகான்கள் மற்றும் ஞானிகளின் ஆசிரமத்துக்கு பொருள்கள் தானம் செய்வதன் மூலமும், விலங்குகளுக்கு உணவளிப்பதன் மூலமும், மரம் நட்டு வளர்ப்பதன் மூலமும் பரிகாரம் தேடலாம். மேலும் ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, மருத்துவ உதவி, பசுக்களை பூஜித்து கோசாலை அமைத்து பராமரித்தல் போன்றவை புத்திர தோஷதிற்கான பரிகாரங்கள் ஆகும்.