பித்ரு தோஷம் உண்மையா?
“தீதும் நன்றும் பிறர் தர வாராது”
நன்மையோ, தீமையோ பிறரால் வருவது கிடையாது. அவரவர் செய்கிற பாவ புண்ணியத்தால் மட்டுமே வரும்.
“மனிதன் மதி வழியில்…
மதியோ விதி வழியில்…
விதியோ கர்ம வழியில்…
கர்மா உன் கையில்…”
அதாவது இன்று நாம் செய்யும் செயல் தான் நாளை நமக்கு வர இருக்கும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டையுமே தீர்மானிக்கும்.
பித்ரு தோஷம் என்றால் என்ன ?
நமது அன்றாட வாழ்வில் பெற்றோர்கள் பிள்ளைகளை சிரமப்பட்டு வளர்ப்பதைப் போல, பிள்ளைகள் இறுதி காலத்தில் பெற்றோர்களை கவனிக்கிறார்களா?.
அப்படி கவனிக்காமல் அவர்களுக்கு செய்யா வேண்டியவற்றை செய்யாமல் இருத்தலே பித்ரு தோஷத்திற்கு வழிவகுக்கிறது.
பித்ரு தோஷம் என்பது முன்னோர்கள் சாபம் அல்ல. நம் செயலால் நாம் தேடிக் கொள்ளும் தோஷமே உண்மையில் பித்ரு தோஷம்!. இது வழி வழியாக, பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
பெற்றோர்களை, மகன் ஒருவன், வருந்த வருந்த முதியோர் இல்லத்தில் விடும் சமயத்தில், அதை பார்க்கும் பேரன், நாளை அவன் அப்பாவை அப்படியே தான் நடத்துவான். உயிருடன் இருக்கும் அப்பா, அம்மாவை கஷ்டப்படுத்தி விட்டு அவர்கள் இறந்த பிறகு ஊர் பார்க்கப் படையல் வைத்து திதி கொடுப்பதால் யாருக்கும் லாபம் இல்லை. இது தான் பித்ரு தோஷம். உண்மையில் பித்ரு தோஷம் என்பது, நமது முன்னோர்கள் நம்மை சபிப்பதால் வருவதில்லை. நம் செயல்களால் நமக்கு வருவது தான் பித்ரு தோஷம் ஆகும்.
முன்னோர்கள் சாபம்
ஒரு பிள்ளை தனது தாய், தந்தையை பசியுடன் அலைய வைத்தால், அவர்கள் சபிக்கத் தான் செய்வார்கள். அந்த சாபம் அந்த வம்சத்தின் மீது படரத் தான் செய்யும். பெற்றோர்கள் தங்கள் கடமைகளை செய்கிறார்களோ இல்லையோ பிள்ளைகள் தங்களது கடமையை செய்தே ஆக வேண்டும்.
சாஸ்திரமும் மாதா, பிதாவிற்கு அடுத்த படியாகத் தான் குருவையும், தெய்வத்தையும் வைக்கிறது. இதன்படி நமது பெற்றோர்களை கவனிக்கத் தவறும் அனைவருமே பித்ரு தோஷத்திற்கு ஆளாவர்கள். அதன் தாக்கத்தால் இறுதியில் வாழ்க்கையையும் இழக்க நேரிடும்.