மேஷ ராசி குணங்கள்
மேஷ ராசி யில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன. மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவானவார். இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி வழியாக உற்றுப் பார்க்கும்போது, மேஷம் என்னும் ஆட்டின் வடிவம் தெரிவதைப் பார்க்கலாம். ராசி மண்டலத்தை மனித உடலாக உருவகப்படுத்தினால், மேஷத்தை கபாலம் என்றும் சொல்லலாம். இந்த பகுதியில் மேஷ ராசியின் குணங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்கள். நிமிர்ந்த நேரான நடையும், கணிந்த பார்வையும் கொண்டவர்கள். பிறரின் பார்வைக்கு வெகுளியானவர் போல காட்சியளிப்பார்கள். நல்ல தீர்கமான ஆயுளும், தெய்வ பக்தியும் கொண்டு இருப்பார்கள். பொறுமை என்பதே மேஷ ராசிக்காரர்களுக்கு கிடையாது. நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். இதனால் சில பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.
மேஷ ராசியானது கால புருஷனின் தலையைக் குறிக்கும் ராசி ஆகும். ராசிகளில் இதுவே முதல் சர ராசி ஆகும். மேஷ ராசிக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை நட்பாகவும். கடகம், விருச்சிகம், மீனம் பகையாகவும். ரிஷபம், கன்னி, மகரம் போன்ற ராசிகள் சமமாகவும் அமைகின்றன.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்குகாக எந்த துன்பம் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவுவார்கள். எந்த இடையூறு ஏற்பட்டாலும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் விடுவார்கள்.
கவலைகளை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும் நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்படும். இவர்களின் அகங்கார குணமும், தான் என்ற எண்ணமும் இவர்களை நேசிப்பவரைக் கூட வெறுக்க செய்து விடும்.
செவ்வாய் அதிபதியாக ஆட்சி செலுத்தும் இந்த மேஷ ராசியில்தான் சூரியன் உச்சம் பெறுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்களிடம் செவ்வாயின் தாக்கம் அதிகமாக இருக்கும். நான்கு அல்லது ஐந்து சகோதரர்களுக்கு இடையில் இவர்கள் பிறந்திருந்தாலும், இவர்களின் அறிவு பலத்தால் இவர்களே முதல்வராக இருப்பார்கள். ஆனாலும், உடன்பிறந்தவர்களிடம் அதிக அன்புடன் இருப்பார்கள். சில நேரங்களில், உடன் பிறந்தவர்கள் இவர்களை புரிந்துகொள்ளவில்லையே எனும் ஆதங்கமும் இவர்களுக்கு எழும்.
இவர்களுக்கு கலைகளில் அதிக நாட்டம் இருக்கும். இவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும். பழைமை விரும்பிகளாகவும் இருப்பார்கள். அதிலும் முன்னோர்கள் நினைவுகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பொக்கிஷம் போன்று பாதுகாப்பார்கள். இவர்களுக்கு மண் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
மேஷ ராசிக்காரர்களிடம் பல விஷயங்களை கிரகிக்கும் தன்மையும், கற்றுக்கொள்ளும் வேகமும் அதிகம் இருக்கும். வேலையிலும் வெகு சீக்கிரம் சாதனை படைப்பார்கள். பலநூறு பேருக்கு மத்தியில் வேலை செய்தாலும், சட்டென்று அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்க்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். கோபத்தில் மன அமைதியை இழந்து விடுவார்கள்.
இவர்களில் பலரும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில் இருக்க மாட்டார்கள். படித்தது ஒன்றாகவும், வேலை செய்வது வேறாகவும் இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்பது, எடுத்துக்கொள்ளும் பணியில் முடிவு வரையிலும் ஆர்வம் காட்டாமல் கோட்டைவிடுவது, எதிரிகளின் பலத்தை கணிக்காமல் செயல்படுவது ஆகியவை இவர்களின் பலவீனங்களாகும்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் சளைக்காமலும், சுயநலம், பிரதி பலன் எதிர்பாராமலும், பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். ஊதியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், எடுக்கும் காரியங்களில் கண்ணும் கருத்துமாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவர்களுக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்
இவர்களுக்கு மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலமும் பிடித்ததாகத் இருக்கும். இவர்களின் ராசிக்கு உகந்தவை மலைத் தலங்கள். அதிலும், முருகன் அருளும் மலைத்தலங்களைத் தரிசித்து வந்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக, பழநி திருத்தலம். தனித்தன்மை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு முருகப்பெருமான் வந்து அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலம் பழநி. ஆகவே, எப்போதும் உங்கள் உள்ளத்தில் பழநி முருகனை நிறுத்துங்கள். மேஷ ராசிக்காரர்கள் இந்தத் தலத்துக்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்றமும் நிச்சயம் உண்டு.