அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி என்றால் இது வகையான அரிசி வகை என நினைக்க வேண்டாம். இது சித்த மருத்துவத்தில் பயன்படும் ஒரு வகை மூலிகையாகும். இதன் விதைகள் அரிசி குருணை போன்று சிறிதாக இருப்பதால் பச்சரிசி எனவும், தாய்பாலை அதிகரிக்க பயன்டுவதால் இது அம்மான் பச்சரிசி என அழைக்கபடுகிறது. இது ரோட்டு ஓரங்களிலும், புதர்களிலும் தானே வளரும் தன்மையுடையது.
அம்மான் பச்சரிசி மூலிகையானது ஈரபதம் உள்ள இடங்களில் தானாக வளரும் தன்மையுடையது. இது சிறு செடிவகையாகும். இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் கூரான நுனிப்பற்களுடன் ஈட்டி வடிவ அமைப்பு கொண்டது. இதன் இனபெருக்கம் ஆனது விதைகள் மூலம் நடைபெறுகிறது. அம்மான் பச்சரிசியின் இலை, தண்டு, பால், பூ போன்ற அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
அம்மான் பச்சரிசியின் வேறு பெயர்கள்
இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய வேறு பெயர்களும் உண்டு.
அம்மான் பச்சரிசி வகைகள்
அம்மான் பச்சரிசி பூக்களின் நிறங்களின் அடிப்படையில் பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி, வயம்மாள் பச்சரிசி போன்ற பெயர்களில் அழைக்கபடுகின்றன.
அம்மான் பச்சரிசியின் மருத்துவ பயன்கள்
நீர்கடுப்பு சரியாகும்
அம்மான் பச்சரிசியை ஒரு கோலி குண்டு அளவு எடுத்து நன்றாக அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீர்கடுப்பு, நமைச்சல் ஆகியவை குணமாகும். இதன் பாலை நகசுத்தி மேல் பற்று போல போட நகசுத்தி குணமாகும். இதன் இலைகளை அரைத்து படைகளின் மேல் பூசினால் படைகள் குணமாகும்.
உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்
சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதத்தை போக்கும் குணம் உண்டு. உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து தாது விருத்தி ஏற்படும். இதை வெள்ளி பஸ்பம் என்றும் கூறுவார்கள்.
குழந்தைகளின் வயிற்று பிரச்சனைகளை போக்கும்
அம்மான் பச்சரிசியின் இலைகளை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து 5 – 7 கிராம் அளவு மோரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலசிக்கலை போக்கும். மேலும் குழந்தைகளின் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளையும் தீர்த்து, வயிற்று பூச்சிகளையும் கொல்லும்.
உஷ்ணத்தை போக்கும்
அம்மான் பச்சரிசி இலையை அரைத்து சுமார் சிறிதளவு பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுத்தால் வெயிலினால் ஏற்படும் வேட்டை, மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் உஷ்ணம் ஆகியவை போகும்.
உடல் பலத்தை அதிகரிக்கும்
இதன் இலைகளை சமைத்து சாப்பிட்டால் உடல் வறட்சி நீங்கும். பனியினால் ஏற்படும் வாய், நாக்கு, உதடு, வெடிப்பு குணமாகும். இதை தூதுவளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலமாகும்.
முகம் பொலிவு பெறும்
இதன் பாலைத் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, மற்றும் பால்பருக்கள் மறையும். கால் ஆணி வலி குறையும். இதன் இலையை நன்கு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து பசும் பாலில் கலக்கிக் காலை வேளையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, போன்றவை குணமாகும்.
தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்
குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இவர்கள் தாய்ப்பால் அதிகம் சுரக்க, அம்மான் பச்சரிசி பூக்களை பசும்பால் விட்டு அரைத்து, பசும்பாலிலேயே கலந்து காலை வேளைகளில் பருகி வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
வெள்ளைபடுதல் குணமாகும்
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்க அம்மான் பச்சரிசியின் இலையை அரைத்து மோரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் 3 முதல் 5 நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.