மச்சம் என்றால் என்ன?
நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு போன்ற ஏதாவது ஒரு நிறமாகவோ அல்லது பல நிறத்திலோ இருக்கும். அது போல இதன் அளவுகள் கூட வேறு வேறாக இருக்கும். எடுத்துகாட்டாக கடுகை போல சிறிதாகவோ, அல்லது அதற்கு மேல் பெரிதாகவோ இருக்கும்.
இந்த மச்சங்கள் ஒரு சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு பிறக்கும்போது சிறியதாக இருந்து நாளடைவில் வளர்வது உண்டு. மேலும் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது இருக்கும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாக இருக்கும். இவை பிறப்பிலிருந்து இறப்பு வரை உடலில் இருந்து மறையாது என்பதால் அரசு ஆவணங்களில் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும்.
எவையெல்லாம் மச்சங்கள் கிடையாது
சிலருக்கு காயங்கள், புண்கள் அம்மை போன்றவைகளால் மச்சங்கள் போன்ற தடங்கள் இருக்கும். ஆனால் இவ்வாறு உண்டானவை உண்மையில் மச்சங்கள் கிடையாது. ஏனெனில் இவ்வாறு தோன்றுபவை நிரந்தரமாக இருக்காது. நாளடைவில் மறைந்து போகலாம்.
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன?
பழங்கால சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் உண்டாகும் இடங்களின் அடிப்படையில் பல பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திர வகையாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம்‚ பதவி‚ சொத்து சேர்க்கை‚ ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை பேச்சு வழக்கில் ‘மச்சக்காரன்’ என்பார்கள். கஷ்டப்பட்டு உழைக்கமலேயே இந்த வசதி வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்திருக்கும்.
ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் வந்து விட்டாலோ அல்லது ஒரு சிலருக்கு நிறைய பெண் மற்றும் ஆண்நண்பர்கள் இருந்தாலோ ‘மச்சக்காரன்’, ‘மச்சக்காரி’ என்பார்கள். அப்படி சொல்பவர்கள் பொறாமையின் காரணமாக இதை சொன்னாலும் அதுவும் ஒரு வகையில் உண்மை தான். நமது உடலில் ஏற்படும் மச்சங்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் கூட வழங்குகிறது. இந்த உண்மையைக் கண்டறிந்து அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான் மச்ச சாஸ்திரம் ஆகும்.
இன்றைய கால கட்டத்தில் மச்ச சாஸ்திரம் குறித்து ஒரு சில நூல்களே உள்ளன. தவிர இந்த மச்சங்களைக் கொண்டும் அது இருக்கும் இடத்தைக் கொண்டும் ஒருவரது குண நலன்களை நாம் அறிந்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் பார்க்கும் போது, ஆண்களுக்கு இடது புறமுள்ள மச்சங்களும் பெண்களுக்கு வலது புறமுள்ள மச்சங்களும் பாதகமான பலன்களைத் தரக் கூடியது என்று மச்ச சாஸ்த்திரம் கூறிகிறது.
மச்சத்தை வைத்து எவ்வாறு பலன் சொல்வது
ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் உடலில் வலது மற்றும் இடது பக்கத்தில் எத்தனை மச்சங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஆண்களுக்கு வலது பக்கத்திலும்‚ பெண்களுக்கு இடது பக்கத்திலும் மச்சம் இருந்தால் யோகம் உண்டாகும். பெரும்பாலும் மச்சங்களை வைத்துப் பலன் சொல்லும் போது, ஒரே மச்சம் ஒரு இடத்தில் இருந்தால் ஆண்களுக்கு ஒரு பலனும், பெண்களுக்கு வேறு பலனும் சொல்வார்கள். அதாவது ஆண், பெண் என இருவருக்கும் ஒரே இடத்தில் இருக்கும் மச்சம் வெவ்வேறு வித்தியாசமான பலன்களைத் தரக் கூடியது.
ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.