தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி
பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்,
தேவையான பொருட்கள்:
1. கோழி கறி – ½ கிலோ
2. நெய் – 2 மேஜை கரண்டி
3. எண்ணெய் – தேவையான அளவு
4. பாசுமதி அரிசி – 2 கப்
5. வெங்காயம் – 1 No.
6. பச்சை மிளகாய் – 3 No.
7. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
8. மிளகாய் தூள் – 1 மேஜை கரண்டி
9. மஞ்சள் தூள் – 1 மேஜை கரண்டி
10. கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
11. தண்ணீர் – 2 கப்
12. உப்பு – தேவையான அளவு
13. கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
14. புதினா – 1 கைப்பிடி அளவு
ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:
1. கெட்டியான புளிக்காத தயிர் – 1 கப்
2. மிளகாய் தூள் – ½ மேஜை கரண்டி
3. உப்பு – தேவையான அளவு
பிரியாணி மசாலா செய்வதற்கு:
1. சோம்பு – 1 ½ மேஜை கரண்டி
2. பட்டை – 2 No.
3. ஏலக்காய் – 4 No.
4. அன்னாசிப்பூ – 1 No.
5. கிராம்பு – 4 No.
செய்முறை:
1. முதலில் கோழி கறியை நன்கு நீரில் கழுவி கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டிய கோழி கறியை போட்டு, அதனுடன் கெட்டியான தயிர், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பின்னர் சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
4. பின்னர் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
5. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
6. பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
7. அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
8. பின்பு ஊற வைத்த சிக்கனை அதனுடன் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை கலந்து விட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
9. பின்னர் குக்கரில் வாணலியில் வேக வைத்த சிக்கனை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும்.
10. பின்பு அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் சேர்த்து கொள்ள வேண்டும்.
11. பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி தழை, புதினா, தேங்காய் பால் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
12. நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.
13. விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்தால், சுவையான தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி.