எண்ணெய் பசை சருமம்
நம் அனைவருக்குமே சருமம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். அவற்றில் ஆயில் ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் சிரமமானது.
நம் சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் பசை இருக்கும். எண்ணெய் பசைபோதிய அளவில் சுரப்பதே சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. அதுவே கூடுதலாக சுரந்தால் எண்ணெய் வழியும் முகம் குறைவாக சுரந்தால் வறண்ட முகம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எனவே எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் எண்ணெய் பசையினால் சருமத்தில் பருக்கள், கட்டிகள், ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க
- ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனப் பொடி சிறிதளவு பால் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவிய பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை தன்மை குறைந்து முகம் பளிச்சிடும்.
- அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும்.
- முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க நன்கு கடைந்த மோரை எடுத்து அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் மோரில் உள்ள நல்ல பாக்டிரீயாக்கள் சருமத்தில் உண்டாகும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி முகத்தை பொலிவடைய செய்யும்.
- பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் பேக் போல போட்டு மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் பளபளவென்று இருக்கும்.
- ஒரு ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு 10 நிமிடங்கள் நன்கு உலர விடவும். பின்னர் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து விட்டு சிறது நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசையினால் ஏற்படும் பருக்களை மறைய செய்து முகத்திற்கு பொலிவை தரும்.
- ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தை அடிக்கடி துடைத்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.
- 1 முதல் 2 ஸ்பூன் ஓட்ஸை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்டுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 2 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் ஜொலிக்கும்.
- சருமத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த ஐஸ் கட்டி உதவும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், எண்ணெய் வழியாமலும் இருக்கும். ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் பயன்படுத்தக் கூடாது.
- தக்காளியை இரண்டு துண்டுகளாக வெட்டி அதன் மேல் சர்க்கரையை தடவி முகத்தில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பின் ஒரு 2 நிமிடங்கள் உலர விட்டு பின் கழுவவும். இவ்வாறு செய்வதால் சரும பிரச்சனைகள் நீங்கி முகம் பொலிவாகும்.
- கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து பின் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழிவது படிப்படியாக குறையும்.
- வெள்ளரிக்காயை அரைத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு சருமத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்பட்டு முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
- க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் கொஞ்சம் எடுத்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம்.