தலை முடி பாதுகாப்பு
நாம் உண்ணும் உணவில் அடிக்கடி பச்சை காய்கறிகள், கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். மாதுளை பழ ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது.
வாரம் ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம். கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாதம் வடித்த கஞ்சி மற்றும் சீயக்காயை பயன்படுத்தலாம். தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. தினமும் தலைக்குக் குளிப்பதால் தலை முடி நன்கு வளரும்.
சிறு வயதிலிருந்தே வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும்.
பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணமாக கிடையாது. இதைத் தவிர்க்க, ‘பொடுதலை’ என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.
சிலர் வெள்ளை முடியை மறைக்க தொடர்ந்து தலைக்கு டை போட்டுக் கொள்வார்கள். இதனால் முடி தற்காலிகமாக கருப்பாக தெரியலாம். அனால் அது நிரந்தர தீர்வு கிடையாது. செயற்கை டை போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவதால் ஒவ்வாமை, கண் பார்வை கோளாறு, புற்று நோய் அபாயம், போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. எனவே இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.