ஓரைகள் என்றால் என்ன?
தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று கூறப்படுகின்றது.
ஒருநாள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. சராசரி சூரிய உதய நேரமாக காலை 6 மணியை அடிப்படையாக கொண்டு தான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன. ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்று சித்தர்கள் கூறுவதில் இருந்தே அதன் சிறப்பை அறியமுடியும்.
உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய சூரியன். அவருடைய ஓரை காலை 6 மணிக்கு தொடங்கும். செவ்வாய்க்கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஓரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஓரையானது ஆரம்பிக்கும்.
9 கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது இரண்டும் சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அந்த இரண்டு கிரகங்களுக்கு மட்டும் ஓரைகள் கிடையாது.
ஓரைகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஜோதிட சாஸ்திரப்படி நாளொன்றுக்கு இருபத்து நான்கு ஓரைகளாக அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஓரை என்ற கணக்கில் பிரிக்கப்பட்டு ஏழு கிரகங்களுக்கு இந்த ஓரைகளை ஆட்சி செய்யும் உரிமை சுழற்சி முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுழற்சி முறையின் படி ஒவ்வொரு நாளும் அன்று என்ன தினம் இருக்கிறதோ அதன் ஓரையே முதலில் வருவதாக அமைந்திருக்கும்.
சுப ஓரைகள்
ஓரைகளில், திங்கள், புதன், குரு, சுக்கிரன் ஆகியவைகள் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும், இந்த ஓரைகளில் தொடங்குவது வெற்றியை கொடுக்கும்.
பொதுவாக புதன் – குரு – சுக்கிரன் ஆகிய ஓரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஓரையும் நல்ல காரியங்கள் செய்வதற்கு சிறந்ததாகும்.
எந்தெந்த ஓரைகளில் என்னென்ன செய்யலாம்?
சூரிய ஓரை
சூரியனை ராஜகிரகம் என்று அழைப்பார்கள். சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷயங்களுக்கான முயற்சியில் ஈடுபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகள் சந்திப்பு , அரசு சார்ந்த முயற்சிகள், தலைவர்களை சந்தித்தல் போன்ற செயல்களை செய்யலாம். இந்த நேரத்தில் உயில், சொத்து சம்மந்தமான பத்திரங்கள் எழுதுவது சிறந்ததாகும். இந்த ஹோரையில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன்பாடுகளையோ செய்வது நல்லதல்ல. சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல.
சுக்கிர ஓரை
களத்திரம் – அழகு – கவர்ச்சி – சுத்தம் – பொருளாதாரம் ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரன் அதிபதி. அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த ஹோரையை பயன்படுத்தலாம். திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கற்றிட ,வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்க மிகவும் சிறந்த ஒரையாகும். விவசாயம், பயணம், பண பரிமாற்றம் போன்ற செயல்களுக்கு சிறந்த பலன்களை தரும்..
புதன் ஓரை
கல்வி – கலைகள் – நுண்ணறிவு போன்ற விஷயங்களுக்கு அதிபதி புதன். வித்தைகள் சம்பந்தமான அனைத்து முயற்சிகளும் இந்த ஓரையில் செய்யத் தொடங்கலாம். கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலைகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசி முடிவெடுக்க சிறந்த நேரம். பயணங்கள் மேற்கொள்ளலாம்.
சந்திர ஓரை
நவகிரகங்களில் மாதா காரகன் – மனம் காரகன் என்று சொல்லக்கூடியவர் சந்திரன். இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கு துவங்குதல் போன்றவற்றை செய்யலாம். சந்திர ஓரையில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
சனி ஓரை
நவகிரகங்களிலே ஆயுள் – தொழில் – கர்மா சம்பந்தமான காரியங்களுக்கு அதிபதி சனி ஓரை. சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஒரையாக சனி ஓரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ய ஏற்ற ஓரை.
குரு ஓரை
நவகிரகங்களுள் சுபகாரகன் குருவாகும். தனகாரகன் சந்தான காரகன் என்றெல்லாம் அழைக்கக்கூடியவர். அனைத்து சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம். வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது. இந்த ஹோரையில் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியங்களை தவிர்த்தல் நல்லது.
செவ்வாய் ஹோரை
ரத்தம் – மருத்துவம் – பூமி – அதிகாரம் போன்ற விஷயங்களுக்கு செவ்வாய் அதிபதியாக திகழ்கிறார். செவ்வாய் ஹோரையில் நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சினைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம். அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல.