அக்கரகாரம்
அக்கரகாரம் என்னும் இந்த மூலிகைச் செடி கருமண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. இந்த மூலிகை இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு கொண்டது. இதன் இலைகள் 15 செ.மீ. நீளமாகவும், முதலில் இளம்பச்சை நிறத்திலும், பின்பு ஊதா நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7-10 பூக்கள் இருக்கும். இது சல்லி வேர் அமைப்பை கொண்டது. இதன் வேர்கள் 5 – 10 செ.மீ. நீளமாக இருக்கும். இதற்கு அக்கார்கரா, அக்கரம் முதலான வேறு சில பெயர்களும் உண்டு.
அக்கரகாரத்தின் வேர் மற்றும் பட்டை மருந்துப் பொருட்கள் செய்ய பயன்படுகிறது. இந்திய மருத்துவத்தில் ஆம்பர் மெழுகு மருந்துப் பொருள் செய்யப் பயன்படுகிறது. இது வாதநோய், மற்றும் காக்காய் வலிப்பு நோய்க்கும் உடனடி நிவாரணமாகும். இது மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அக்கரகாரம் மூலிகையின் மருத்துவ பயன்கள்
பல் பிரச்சனைகள் தீரும்
சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.
காய்ச்சலை கட்டுபடுத்தும்
அக்காரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பேரிச்சம் பழ விழுதைக் கலந்து தேன் சேர்த்து கொள்ள வேண்டும். கடும் காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ள நேரங்களில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் நா வறட்சி ஏற்படும். அப்போது இந்த அரைத்த விழுதை சிறிதளவு நாக்கில் தடவினால், நாவில் ஏற்பட்ட வறட்சி நீங்கி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், காய்ச்சலும் குறைய ஆரம்பிக்கும்.
தொண்டை பிரச்சனைகள் தீர்க்கும்
அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து, அதை உள் நாக்கில் தடவி வந்தால், தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி நலம் பெறுவார்கள்.
குரலின் இனிமை கூடும்
அக்கரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் குரலின் இனிமை கூடும்.
மயக்கத்தை போக்கும்
திடீரென மயங்கி விழுந்து பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வழியாக செலுத்தினால், உடனே மயக்கம் விலகி, சுய நினைவை அடைவார்கள். காக்கா வலிப்பு வியாதியும் சரியாகும்.
மலச்சிக்கலை தீர்க்கும்
நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு மேற்சொன்ன அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணம் சேர்த்து பயன்படுத்தினால் நாவறட்சி நீங்கி மலச்சிக்கல் தீரும்.
வாய் பிரச்சனைகளை தீர்க்கும்
சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் போட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வந்தால், தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, அதீத தாகம் போன்றவை சரியாகும்.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்.
நரம்பு தளர்ச்சியை போக்கும்
அக்காரகாரம், குங்குமப்பூ, ஜாதிக்காய், சந்தனம், கிராம்பு, சுக்கு, திப்பிலி சேர்த்து, நன்கு இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று சம்பந்தமான வியாதிகள் மற்றும் நரம்புத் தளர்ச்சி பாதிப்புகள் நீங்கி உடல் பலமாகும்.
உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்
அக்கரகாரம் சாப்பிட்டு வந்தால் உடலின் மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, கெட்ட செல்கள் வெளியேறி, புதிய செல்கள் உருவாகும். இதன் மூலம், உடலின் வனப்பும், பொலிவும் அதிகரித்து, மனதில் உற்சாகம் தோன்றும், நாம் செய்யும் செயல்களில் ஈடுபாடு ஏற்படும்.
தலைவலியை தீர்க்கும்
அக்காரகாரப் பட்டையை சூரணம் போல செய்து, அதில் சிறிதளவு எடுத்து அரை லிட்டர் நீரில் கலந்து, மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு சுண்டக் காய்ச்சி கொள்ள வேண்டும். இதை இறக்கி ஆற வைத்து பருகி வந்தால் அதிக தாகம், நா வறண்டு போவது, தலைவலி போன்ற பாதிப்புகள் தீரும்.