ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள்
நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு – பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின் காரணமாக ஆண்களுக்குகூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் உடலில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. மேலும், அதிக அளவிலான மன அழுத்தத்தின் காரணமாக, ஆண்களுக்கு குறைந்த டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அல்லது பிட்யூட்டரி சுரப்பிகள், ஹைபோதாலமஸ், தைராய்டு சுரப்பிகள் மற்றும் அட்ரீனல் சுரப்பிகள் போன்றவற்றால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள் மலட்டுத் தன்மைக்கு வழி வகுக்க காரணமாக அமைகிறது.
மலட்டுத்தன்மை ஏற்பட காரணங்கள்
ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் போதை மருந்துகள், ஆல்கஹால் பயன்படுத்துவது மற்றும் அதிகப்படியான புகைபிடித்தல் போன்றவை கூட மலட்டுத் தன்மைக்கு காரணமாகிறது.
அதிலும், போதை மருந்துகள் பயன்படுத்துபவர்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தி குறைவாகவே காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஆண்கள் இறுக்கமான ஆடை, ஜீன்ஸ் போன்றவற்றை அணிவதான்ல் விந்தணுக்கள் அதிக வெப்பமான சூழலுக்கு உள்ளாகும். அளவுக்கு அதிகமான உடல் பருமன் கூட ஆண் மலட்டுத் தன்மைக்கு காரணம் ஆகலாம். ஆண்களின் மலட்டுத் தன்மை சரி செய்ய எந்த மாதிரியான உணவினை எடுத்துக்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.
மலட்டுத் தன்மையை நீக்கும் உணவுகள்
வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும் உணவை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் மலட்டுத்தன்மை குறையும்.
வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை தரமான உயிரணுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாக உதவி செய்கின்றன. இந்த வைட்டமின்களில் பெரும்பாலானவை பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, தக்காளி, பீன்ஸ் போன்றவற்றில் கிடைக்கின்றன. இந்த காய்கறிகளை அதிகளவில் தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், உங்களுக்கு மலட்டுத் தன்மை வருவதை குறைக்க முடியும்.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருக்கிறது. இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பைத் தூண்டக் கூடியது. ஆண்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.
மாதுளை பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும். மாதுளையை ஜூஸாக்கி அருந்துவதை விட அப்படியே பழமாகச் சாப்பிடலாம்.
மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் டி நிறைவாக உள்ளன. இவற்றை அடிக்கடிச் சாப்பிட்டு வருவதால் மலட்டுத்தன்மை நீங்கிவிடும்.
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்போது, அவற்றிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்றவை கார்டிசால் அளவைக் குறைத்து, டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கச் செய்கிறது.
ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவதுடன், 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது.
அவகேடோவில் இருக்கும் வைட்டமின் இ, விந்தணுவின் இயக்கம் சிறப்பாக நடைபெற உதவக்கூடியது. வாரத்துக்கு ஒருமுறையாவது அவகேடோ சாப்பிடுவது ஆண்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்துக்கும் உதவும்.
அஸ்வகந்தா என்ற ஆயுர்வேத மூலிகை, ஆண்களுக்கு விந்தணுக்களின் செறிவை அதிகரிக்க உதவுகிறது. அஸ்வகந்தா லேகியம் சாப்பிடுவதின் மூலமாகவும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை சரி செய்ய முடியும்.
அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் . மலட்டு தன்மையால் ஏற்பட்ட பாதிப்பு படிப்படியாக குறையும்.
தவிர்க்க வேண்டி உணவுகள்
துரித உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மடிக்கணினிகளை பயன்படுத்தும்போது மடியில் வைத்து வேலை செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அதிக சூடு இருக்கும் இடங்களில் ஆண்கள் வேலை செய்வதும் உயிரணுக்களின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்பு உள்ளது.