திருமணத்தில் அருந்ததி பார்ப்பது
பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு செய்யபடுகிறது என்று தெரிவதில்லை. திருமணத்தில் அய்யர் சொல்வதை அப்படியே செய்து விட்டு வந்துவிடுகிறோம். அப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களில் ஒன்றுதான் அருந்ததி பார்ப்பது. இந்த சடங்கு ஒரு சில குடும்பங்களில் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. எதற்கு அய்யர் அருந்ததி பார்க்க சொல்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அருந்ததி பார்த்தல்
ஒவ்வொரு திருமணத்திலும் திருமணம் முடித்த பிறகு மணமக்கள் இருவரையும் மண்டபத்திற்கு வெளியே கூட்டி வந்து வானில் கையை காட்டி அருந்ததி நட்சத்திரம் தெரிகிறதா என்று அய்யர் கேட்க, உடனே மணமக்களும் தெரிகிறது என்று கூறுவர். ஆனால் அருந்ததி நட்சத்திரம் அவ்வளவு எளிதாக தெரியாது. அருந்ததி நட்சித்திரத்தை ஏன் பார்க்க சொல்கிறார், நாம் ஏன் பார்க்கிறோம் என்பது யாருக்குமே தெரியவில்லை.
அருந்ததி தரிசனம்
சப்தரிஷிகளில் ஒருவர் வசிஷ்டர் ஆவார். இவரின் மனைவியே அருந்ததி ஆவார். வானில் உள்ள பல்லாயிரக்கணக்கான நட்சத்திர மண்டலங்களில் சப்தரிஷி மண்டலமும் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகள் வானில் நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். இந்த நட்சத்திர தொகுப்பில் வசிஷ்ட நட்சத்திரத்துடன் எப்போதும் இணைந்தது போல இருக்கும் நட்சத்திரமே அருந்ததி நட்சத்திரமாகும். வாழ்க்கையில் சுக, துக்கம் என எந்த நிலையிலும் மணமக்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் அருந்ததி நட்சத்திரம் போல இணைந்தே இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்கே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
இதில் வசிஷ்டர் நட்சத்திரம் இயல்பாக வானில் தெரியும். ஆனால் அருந்ததி நட்சத்திரமோ அவ்வளவு எளிதாக தெரியாது, உற்று பார்த்தால் மட்டுமே சற்று மறைந்தார் போல தெரியும். எனவே குடும்பத்தை காக்கும் பெண்ணானவள் தன்னை மறைத்துக் கொண்டு தனது கணவணின் குடும்பத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்போது அவளது குடும்பமும், அப்பெண்ணும் சமுதாயத்தால் பாராட்டபடுவார்கள்.
இதுவே அருந்ததி பார்த்தல் சடங்கின் முக்கிய மையக்கருத்தாகும்.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.