வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதற்கு நம் உடலை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் சாப்பிடக்கூடிய உணவு மிகவும் அவசியமாகும். ஆனால் இன்றைய நவீன வாழ்க்கை சூழலில் உணவை சுவைக்காகவும், பசியை கட்டுப்படுத்தவும் மட்டுமே நாம் சாப்பிடுகிறோம். நாம் சாப்பிடக்கூடிய இந்த உணவு நம் உடலுக்கு தேவையான முழு ஆரோக்கியத்தை கொடுக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை.
நமது உடலுக்கு தேவையான அனைத்துவிதமான ஊட்டச்சத்துகள் தினமும் சாப்பிடும் உணவிலிருந்தே கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததாகவும், சத்தனதாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்.
அதற்கு எந்த விதமான உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்லாமல் அந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதும் நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். ஆனால் சிலர் நேரமின்மையின் காரணமாக உணவுகளை சாப்பிடும்போது வேக வேகமாக சாப்பிடுவதை பார்த்திருப்போம். இவ்வாறு வேக வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.
உடல் பருமன்
எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு முக்கியமான காரணம் வேகமாக சாப்பிடுவதே ஆகும். உணவை நன்றாக மெல்லாமல் வேகமாக சாப்பிடுவது நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவை அதிகரிக்க செய்யும்.
சர்க்கரை நோய்
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில் இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்கள் மிக எளிதில் பாதிப்படைகின்றனர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறினால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
வளர்ச்சிதை மாற்ற குறைபாடு
இன்சுலின் பாதிப்பால் வளர்ச்சிதை மாற்ற நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் சர்க்கரை நோய் மட்டுமின்றி இதய நோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. வேகமாக சாப்பிடும் பழக்கம் உடையவர்களுக்கு விரைவில் வளர்ச்சிதை மாற்ற நோய் வருவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வேகமாக சாப்பிடுவதால் நல்ல கொழுப்பு எனப்படும் HDL(High-Density Lipoprotein) கிடைப்பது குறையும். இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
இரைப்பை அழற்சி
வேகமாக சாப்பிடுவதால் இரைப்பை அழற்சியினால் குடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகள் சிலருக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாகவும், இதற்கு காரணம் வேகமாக சாப்பிடுவதே என்றும் கூறுகின்றனர்.
மூச்சுக்குழல் அடைப்பு
வேகமாக சாப்பிடுபவர்கள் உணவை மெல்லாமல் அப்டியே விழுங்கி விடுகிறார்கள். இப்படி செய்வதால் மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் எப்பொழுதும் உணவுகளை நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று கூறி வளர்க்க வேண்டும்.
உணவை நாம் எப்படி சாப்பிட வேண்டும்?
வாழ்க்கைக்கு உணவு மிக முக்கியம். ஆகவே அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ஒவ்வொரு உணவிற்கும் குறைந்தது 20 நிமிடம் எடுத்து கொள்ளுங்கள். இது உடலுக்கும் மூளைக்கும் உணர்வை ஏற்படுத்தும் சிக்னலை அனுப்ப அவசியமாக தேவைப்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவை ரசித்து பின் ருசித்து சாப்பிட வேண்டும். உணவின் வாசனை, தோற்றம் என அனைத்தையும் நன்கு உணர்ந்து சாப்பிட வேண்டும். இப்படி ரசித்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட நீண்ட நேரம் எடுத்து கொள்ள நேரிடும்.
உணவை சிறிதளவு எடுத்து நன்கு மென்று சாப்பிடுங்கள். இதனால் சாப்பிடும் வேகத்தை குறைப்பதுடன் உணவு செரிக்கும் வேகத்தை அதிகரித்து அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.