கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள்
உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால், அடிக்கடி கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக, சிறு வயது முதலே பார்வைக் கோளாறு ஏற்பட்டு கண்ணாடி போடும் நிலை ஏற்படுகிறது.
மேலும், தொலைக்காட்சி, கணினி மற்றும் செல்போன் முன்பாக அதிக நேரம் வேலை செய்பவர்களும் விரைவில் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவை அனைத்திற்கும் போதிய சத்துக்கள் இல்லாதது மற்றும் கண்கள் குளிர்ச்சி தன்மையை இழந்து வறண்டநிலையில் இருப்பதுமே காரணமாக அமைகிறது.
நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமாக இருக்கின்ற கண்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அன்றாட வாழ்க்கையையே பாதித்துவிடும். கண்களை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருந்தால் கண் பார்வையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
ஆரோக்கியமான கண்கள் எப்போதும் நல்ல பொலிவோடு, அழகாகவும், பளிச்சென்ற பார்வையுடனும் இருக்க வேண்டும். இதற்கு நாம் கண்கள் அதிகப்படியான வெப்பத்தில் இருந்து பாதுகாத்து குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க எண்ணெய்க் குளியல், கண்களுக்கு மசாஜ் போன்றவற்றை நாம் செய்து கொண்டாலும் கண்களுக்கு ஆற்றலை அளிக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
அத்தகைய உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.
கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் உணவுகள்
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் கரோட்டினாய்டு என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுகளை சாப்பிட்டால், கண் எரிச்சல் மற்றும் பார்வையை பாதிக்கும் வெளிச்சத்திலிருந்து பாதுகாத்து, குளிர்ச்சியை கொடுக்கிறது.
கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். கீரைகளில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே வாரத்தில் 2 முறையாவது கீரை எடுத்துக் கொள்வது நல்லது.
முருங்கை பிஞ்சு, நீர்ச்சத்து மிகுந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட் போன்ற பச்சைக் காய்கறிகள் கண்களின் உறுப்புகளை நன்கு பலப்படுத்தி பார்வை நரம்புகளுக்கு பலத்தை சேர்க்கிறது.
கண்களை பாதுகாக்க வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி கண்ணில் வைத்து 20 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான நீரில் கண்ணை கழுவினால் கண் மிருதுவாகும்.
மேலும் இதில் உள்ள காபிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் கண் வீக்கம், கண் எரிச்சல் போன்றவற்றை குணமாக்குவதுடன் நல்ல குளிர்ச்சியை கொடுக்கிறது..
கண்களின் குளிர்ச்சிக்கு கற்றாழை நன்கு உதவும். கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்துக் கொண்டு, அவற்றை இமைகளில் தடவி வந்தால் கண்ணின் அழகிற்கும், குளிர்ச்சிக்கும் பயன்படுகிறது.
மேலும், கண்ணில் ஏற்படும் தொற்றுகளையும் தடுக்கிறது.
மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் சூரிய வெளிச்சத்தால் கண் கூசுதல் நீங்கி, பார்வை நன்கு தெரிவதுடன், கண்களுக்கு நல்ல குளிர்ச்சியையும் கொடுக்கிறது.