ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன?
ராசி அதிபதி பொருத்தம் என்பது குடும்பம் சந்தோஷமாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் ஆகும். ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். பிறக்கும் பிள்ளைகள் யோகமாக வாழ்வார்கள். ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடையே ஒற்றுமையும், சந்தோஷமான வாழ்க்கையும் அமையும். பொருத்தம் மத்திமம் என்றால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும்.
இந்த பொருத்தம் இருந்தால் ஆண் மற்றும் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் அதாவது சம்பந்திகள் மிகவும் அன்யோன்னியமாக இருப்பார்கள். சம்பந்திகள் ஒற்றுமை நீடிக்க இந்த ராசி அதிபதி பொருத்தம் அவசியம். மேலும் இது தம்பதிகளிடையே நீண்ட ஆயுள் மற்றும் பிறக்கும் குழந்தையின் அதிர்ஷ்டம் போன்றவற்றை குறிப்பிடுகிறது.
ராசி அதிபதி பொருத்தம் பார்ப்பது எப்படி?
12 ராசிகளுக்கும் அதிபதிகள் உண்டு. அந்த அதிபதிகள் கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மற்ற கிரகங்களுடன் உறவு உண்டு. பெண்ணின் ராசி அதிபதி, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்றால் மட்டுமே பொருத்தமில்லை. ஆனால் நட்பு, சமம் என்றால் பொருத்தம் உண்டு. உதாரணமாக, பெண்ணின் ராசி அதிபதி சந்திரன். ஆணின் ராசி அதிபதி சனி என்றால், இவர்களுக்கு ராசி அதிபதி பொருத்தம் உள்ளது.
பெண் ராசிக்கு, ஆணின் ராசி அதிபதி நட்பு என்றால் உத்தமம். சமம் என்றால் மத்திமம். பகையென்றால் பொருத்தமில்லை. ராசி அதிபதி பொருத்தம் சிறப்பாக இருந்தால் தான் உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். ஆண், மற்றும் பெண் இருவருக்கும் ஒரே ராசி அதிபதியோ அல்லது ராசி அதிபதிகளுக்குள் நட்பு இருந்தாலோ ராசி அதிபதி பொருத்தம் உண்டு. பகை அதிபதியாக இருந்தால் பொருத்தம் இல்லை. இந்த அம்சம் இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஆண், பெண் இருவரும் ஒரே ராசி அல்லது 6, 8 ராசிகளில் இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் இல்லையென்றாலும் பரவாயில்லை. பெண் மற்றும் ஆண் பிறந்த ராசியில் உள்ள அதிபதிகளின் ஒற்றுமையே இந்த பொருத்தத்தை தீர்மானிக்கிறது. சில சமயங்களில் ராசி அதிபதிகளிடையே ஒற்றுமை இல்லாவிட்டால், ஜாதகத்தில் உள்ள சமசப்தம ஒற்றுமை மற்றும் மகேந்திர பொருத்தம் இந்த குறையை தீர்க்கும்.
ராசி அதிபதி, நட்பு, பகை கிரகம் :
மேஷம், மற்றும் விருச்சிகம் ராசிக்கு அதிபதி செவ்வாய். நட்பு கிரகங்கள் – சூரியன், சந்திரன், குரு. பகை கிரகம் புதன்.
மிதுனம், மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். நட்பு கிரகங்கள் சூரியன், மற்றும் சுக்கிரன். பகை கிரகம் சந்திரன்.
தனுசு, மற்றும் மீன ராசிக்கு அதிபதி குரு. நட்பு கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய். பகை கிரகம் சுக்கிரன்.
ரிஷபம், மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். நட்பு கிரகங்கள் புதன், மற்றும் சனி. பகை கிரகம் சூரியன், மற்றும் சந்திரன்.
மகரம், மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி சனி. நட்பு கிரகங்கள் புதன், மற்றும் சுக்கிரன். பகை கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய்
கடக ராசி அதிபதி சந்திரன், நட்பு கிரகங்கள் சூரியன், மற்றும் புதன். பகை கிரகங்கள் ராகு, மற்றும் கேது.
சிம்ம ராசி அதிபதி சூரியன். நட்பு கிரகங்கள் சந்திரன், செவ்வாய், மற்றும் குரு. பகை கிரகம் சுக்கிரன்.
ராகு, மற்றும் கேது போன்ற நிழல் கிரகங்களுக்கு சொந்த வீடு கிடையாது.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.