தினப் பொருத்தம் என்றால் என்ன?
தினப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முதல் பொருத்தம் ஆகும். தினப் பொருத்தம் என்பது கணவன், மற்றும் மனைவிக்கு இடையே தினசரி எந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பதை பற்றி கூறும் ஒரு பொருத்தமாகும். தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்றும் கூறுவார்கள்.
திருமண பொருத்தத்தில் இந்த தினப்பொருத்தம் இருந்தால் கணவன், மற்றும் மனைவி இடையே ஒற்றுமை மற்றும் இன்பமயமான திருமண வாழ்வு அமையும். மணமகன், மணமகள் இருவரின் ஆயுள் மற்றும் ஆரோக்கிய பலம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.
தினம் என்றால் நட்சத்திரம் என அர்த்தம். தினமும் சந்திர பகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம் ஆகும். ஷேத்திரம் என்பதே நாளடைவில் மருவி நட்சத்திரம் என ஆகியது. தினப் பொருத்தம் ஆனது தாராபலன் என்று சொல்லக்கூடிய பொருத்தங்களில் ஒன்று. தினப்பொருத்தம் என்பது முக்கியமான ஒன்றாகும்.
தினப் பொருத்தம் எவ்வாறு பார்க்க வேண்டும்?
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணினால் வரும் எண்ணிக்கையானது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக இருந்தால், தினப்பொருத்தம் உள்ளது என்று அர்த்தம். இந்த எண்ணிக்கை இல்லையெனில் தின பொருத்தம் இல்லை என பொருள்.
மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் தினப் பொருத்தம் உள்ளது என அர்த்தம். சில ஜாதகங்களில் மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால், மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்தடுத்த பாதங்களில் ஏதாவது ஒன்றாகவும் இருந்தால் அது சுபப் பொருத்தம்.
அதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருந்தால், தினப் பொருத்தம் உள்ளது என அர்த்தம்.
பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி, வரும் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2, 4, 6, 8, 9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 26, 27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான்.
ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்.
பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீரிஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம்.
ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் இந்த பொருத்தம் இல்லை.
தினம் பொருத்தத்தின் எண்ணிக்கை பலன்கள்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 1,10,19 என எண்ணிக்கை வந்தால் அது மரணயோகம் அல்லது ஜென்ம யோகம் என்று அர்த்தம். எனவே இதற்கு தினப்பொருத்தம் இல்லை.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 2,11,20 என்ற எண்ணிக்கையில் வந்தால் அது சம்பத் யோகம் எனப்படும். இது ஒரு சந்தோஷம் தரும் அமைப்பாகும். எனவே இதற்கு தினப்பொருத்தம் உண்டு.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 3,12,21 என்ற எண்ணிக்கையில் வந்தால் அது விபத்து யோகம் எனப்படும். இதனால் எதிர்பாராத சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்புகள் அதிகம். எனவே இதற்கு தினப்பொருத்தம் இல்லை.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 4,13,22 என்ற எண்ணிக்கையில் வந்தால் அது சேமயோகம் எனப்படும். இதனால் இருவருக்கும் சுகமான வாழ்வு அமையும். எனவே இதற்கு தினப்பொருத்தம் உண்டு.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 5,14,23 என்ற எண்ணிக்கையில் வந்தால் அது பகை யோகம் ஆகும். இதனால் பீடை உண்டாகும். எனவே இதற்கு தினப்பொருத்தம் இல்லை.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 6,15,24 என்ற எண்ணிக்கையில் வந்தால் அது சந்தான பலன் ஆகும். யோகமான பலன்கள் ஏற்படும். எனவே இதற்கு தினப்பொருத்தம் உண்டு.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 7,16,25 என்ற எண்ணிக்கையில் வந்தால் அது வதயோகம் எனப்படும். வத என்றால் நோய் என்று அர்த்தம். எனவே இதற்கு தினப்பொருத்தம் இல்லை.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 8,17,26 என்ற எண்ணிக்கையில் வந்தால் அது மித்ர யோகம் எனப்படும். மேலும் இதனால் இருவரின் வாழ்க்கையிலும் மேன்மையான நிலை நிச்சயம் ஏற்படும். எனவே இதற்கு தினப்பொருத்தம் உண்டு என்று அர்த்தம்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 9,18,27 என்ற எண்ணிக்கையில் வந்தால் அமிர்த யோகம் என்று அர்த்தம். இதனால் அனைத்து சகலவித சௌபாக்கியம் இருவரின் வாழ்விலும் கிடைக்கும் என அர்த்தம். இதற்கு தினப்பொருத்தம் உண்டு என்று அர்த்தம்.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.