கருவுற்றிருக்கும் பெண்களின் உணவு முறைகள்
ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கருவுறுதலை வேகமாக்கும். ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகள் பெண்களின் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கருவுருதலுக்கு ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இளந்தம்பதியர் கர்ப்பத்துக்கு திட்டமிடும் போது கருவின் ஆரோக்கியம் குறித்தும் மனதில் கொள்ள வேண்டும். கருவை சுமப்பது பெண் தான் என்று பெண்கள் மட்டுமே இதில் கவனம் செலுத்த கூடாது. ஆண்களுக்கும் இது பொருந்தும். தம்பதியர் ஆரோக்கியமான பாலியல் உறவை கொண்டிருந்தாலும் கருவுறுதலை ஊக்குவிக்கும் உணவுகளையும் சேர்த்துகொள்வது அவசியம்.
ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கருவுறுதலை வேகமாக்கும். இந்த உணவுகள் பெண்களின் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் கருவுறுதலுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு ஊட்டச்சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அதில் முக்கியமான சிலவகை உணவுகளை பார்க்கலாம்.
காய்கறிகள், கீரைகள்
காய்கறிகள் , கீரைகள் பொதுவாகவே சத்து நிறைந்தவை. வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் கொண்டவை. இதிலும் அதிகம் எடுத்துகொள்ள வேண்டிய காய்வகைகள் குறித்து பார்க்கலாம். பச்சை இலை காய்கறிகள், அடர் பச்சை நிற இலைகள், ப்ரக்கோலி,முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், பல வண்ண காய்கறிகள் போன்றவற்றை அவ்வபோது அல்லது தினசரி ஒன்றை கட்டாயம் உணவில் அதிகம் இடம்பிடிக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
பருப்பு வகைகள்
அனைத்து வகையான பருப்புகளையும் கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம். அதில் பைபர்கள், புரத சத்துக்கள், இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் கால்சியம் அதிகமாக நிறைந்திருக்கிறது. சமீபகாலமாக பெண்களுக்கு ஃபோலேட் சத்து சற்று குறைவாக இருக்கிறது. இது குழந்தை குறைவான எடையில் பிறக்க முக்கிய காரணமாகும். இதனால் பீன்ஸ்,சோயாபீன்ஸ், கொண்ட கடலை, பட்டாணி கடலை, வேர்கடலை ஆகியவற்றை சாப்பிடலாம்.
பழங்கள்
பழங்கள் ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. கருவுறுதலை மேம்படுத்தக்கூடிய பழங்களில் வைட்டமின் சி நிறைந்த மாதுளை, அவகேடொ, வாழைப்பழம், பெர்ரி (அனைத்து வகையான பெர்ரி ) போன்றவற்றை அவ்வபோது சேர்க்கலாம். ஒவ்வொரு பழங்களிலும் கருவுறுதலை மேம்படுத்தும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது. ஆரஞ்சு, சாத்துகுடி என சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் இனப்பெருக்க செயல்பாட்டை துரிதப்படுத்த உதவும் என்பது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி பெண்களுக்கு மிகவும் உதவக் கூடியது.
ட்ரை ப்ருட்ஸ்
வைட்டமின் இ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட பாதாம், வால்நட், இனப்பெருக்க முறையை தூண்டும் பூசணி விதைகள், ஆளி விதைகள், சூரிய காந்தி விதைகள் போன்றவற்றை சேர்க்கலாம். ஒவ்வொரு ட்ரை ப்ரூட்டிலும், ப்ரஷ் ப்ரூட்ஸில் உள்ள அதே அளவிலான சத்துக்கள் இருக்கிறது. அதனால் குறைவான ட்ரை ப்ரூட்களை சாப்பிட்டாலே அதன் மூலம் அதிகமாக சத்துக்களை பெற முடியும். அதே நேரத்தில் அதிக சக்கரை சத்தும் அதிகமாக இருக்கும். இதனால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகமாக வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு அளவாக ட்ரை ப்ரூட்களை சாப்பிடலாம்.
பேரிட்சை பழத்தில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் கர்ப்பத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க பயன்படுகிறது. கருப்பையின் உறுதியை பாதுகாப்பது மட்டுமன்றி கரு நின்ற பிறகும் தக்க வைக்க உதவுகிறது.
பால் மற்றும் பால் பொருட்கள்
கால்சியம், நல்ல கொழுப்புகள், வைட்டமின் டி போன்றவற்றில் நிறைந்திருக்கும் பால் பொருட்கள் இளந்தம்பதியருக்கு அவசியம் தேவை. புதுமணத்தம்பதிக்கு பாதாம் சேர்த்த பால் தரக்காரணம் கூட கருவுறுதலை ஊக்குவிக்கதான். பால், ப்ரோபயாடிக் நிறைந்த தயிர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் கருவுறுதலை இயற்கையாக ஊக்குவிக்கலாம்.
பாலில் உள்ள வைட்டமின்கள் ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
அசைவம்
அசைவம் எடுத்துகொள்பவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் மூலம் கொண்டவை. முட்டை, ஷெல் பிஷ், சிப்பி உணவு, சால்மன் மீன், இறைச்சி போன்றவை கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. மேலும் இவை கர்ப்பப்பையில் எண்டோமெட்ரியம் வலுப்படுத்த உதவுகிறது. கடல் உணவில் வைட்டமின் பி 12 அடங்கியுள்ளது. இந்த வகை உணவுகள் விந்தணுக்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும்.
மேற்கண்ட ஒவ்வொரு உணவு பொருளும் ஒவ்வொரு சத்தை உள்ளடக்கியுள்ளது. (இது குறித்து தனியாக பார்க்கலாம்) இவையெல்லாமே கருவுறுதலை ஊக்குவிக்கும் உணவுகள். கருவுறுதலை தூண்டக்கூடிய சத்துக்களை உள்ளடக்கியவை. கருமுட்டை, அண்டவிடுப்பு, ஹார்மோன் சமநிலை, விந்தணுக்கள் எண்ணிக்கை, அளவு என அனைத்தையும் ஆரோக்கியமாக வைக்க கூடியவை என்பதால் இந்த உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து வருவது நிச்சயம் கருவுறுதலை ஊக்குவிக்கும்.