செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் போதும்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும் ஒரு தொகையை ஈட்டக்கூடியவர்கள் இன்றைய நாள் எப்படி இருக்கும்? என்கிற பதட்டத்தோடு தான் செல்வார்கள்.
இவர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களைப் போன்று மாதமானால் சம்பளம் வந்து சேராது. அன்றாட செலவுகளை சமாளிக்க தினந்தோறும் அவர்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தினமும் சம்பாதித்துக் கொள்ளலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மாதம் ஒரு முறை வாங்கும் சம்பளத்தை வைத்து தான் மொத்த மாதத்தையும் ஓட்டியாக வேண்டும். ஆக இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல உத்தியோகமும், தொழிலும் சமமான தராசில் தான் நிற்கிறது.
ஒரு வீட்டில் மனைவி என்பவள் தான் லட்சுமியின் அம்சமாக இருக்கிறாள். அந்த மனைவியானவள் தினம்தோறும் கணவன் வீட்டைவிட்டு வெளியே செல்லும் பொழுது சரியாக வழி அனுப்பும் முறையை பின்பற்ற வேண்டும். இந்த முறையில் அவர்களை வழி அனுப்பினால் வெற்றி நிச்சயம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது அவர்களை புன்னகை பூத்த முகத்துடன் வழி அனுப்பி வைத்தால் அன்றைய நாள் அவர்களுக்கு வெற்றிகரமாக அமையும்.
நீங்கள் கோவிலுக்கு செல்ல விபூதி, குங்குமம் போன்ற பிரசாதங்களை ஒரு பேப்பரில் மடித்து வைத்து வீட்டிற்கு கொண்டு வருவீர்கள் அல்லவா? அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் கணவன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் அவர்களுக்கு அந்த பிரசாதத்தை நெற்றியில் வைத்து விடுங்கள். அது போலவே வெளியில் செல்லும் கணவன், மனைவி கையால் 10 ரூபாய் பணமாவது வாங்கி கொண்டு சென்றால் அன்றைய நாள் வருமானம் அதிகரிக்கும் என்கிற ஐதீகம் உண்டு. தினமும் பத்து ரூபாயாவது கணவனுக்கு பாக்கெட்டில் வைத்து வழி அனுப்பி பாருங்கள்! அன்றைய நாள் வருமானம் சிறப்பாக அமையும்.
ஒரு வீட்டில் வரவு, செலவு கணக்குகளை பார்ப்பது கணவனாக இருப்பதை விட மனைவியாக இருப்பது சுபீட்சத்தை கொடுக்கும். கணவன் பட்ஜெட் பார்த்தால் மனைவிக்கு கணவன் படும் கஷ்டம் விளங்காது. மனைவி அதை ஏற்றுக்கொண்டால்தான் அந்த வீட்டில் செல்வம் பொங்கும்.
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை மனைவியிடம் கொடுத்து விட்டு உங்களுக்கு தேவையான பணத்தை மனைவியின் கையால் வாங்கிக் கொண்டு செல்வதும் கணவனுக்கு என்ன தேவை என்பதை அவன் கேட்காமலேயே மனைவி அதை நிறைவேற்றுவதும் சிறந்த தம்பதிகளாக வாழ வழிகளாகும்.
சம்பாதிக்கும் மனைவியாக இருந்தால் இது உன்னுடைய பணம்! இது என்னுடைய பணம்! என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் நம்முடைய பணம் என்கிற மனப்பான்மை இருந்தால் தான் பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு, தினந்தோறும் செல்வது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். உங்களை சுற்றி நல்ல அதிர்வலைகள் எழுவதை நிச்சயமாக நீங்களே பார்க்கலாம்.