கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்
நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்தை பொறுத்தே நம் தலைமுடி ஆரோக்கியமும் அமைந்திருக்கும். நம் உடலில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அது நம் தலைமுடியையும் பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதின் மூலம் நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும்.தலைமுடி எதனால் உதிர்கிறது அதை எப்படி தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம்.
நோய்த்தொற்று
நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு அதிகமாவதற்கு முன்னரே அதனை கண்டுபிடுத்து அதற்குரிய மருவத்தரை அணுகி சரியான மருந்துகளை எடுத்துக்கொள்வதின் மூலம் நோய் பாதிப்பு குறையும். இத்தகைய நோய் பாதிப்பும் முடி உதிர்வுக்கு காரணமாக அமைகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும். நல்ல சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பொடுகு தொல்லை
அளவுக்கு அதிகமாக பொடுகு இருந்தால் அது சொரியாசிஸ் என்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதைத் தவிர சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் பொடுகுத் தொல்லை வருவது உண்டு. பெரும்பாலும் பொடுகுத் தொல்லை வராமல் இருக்க ஒருவர் பயன்படுத்திய சீப்பை வேறு ஒருவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதற்கு முன்னர் அதில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி கறு கருவென வளரும்.
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு முடியின் வேர்க்கால்கள் வலுப்பெறும்.
கூந்தல் வளர்ச்சி
கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கக் கூடிய பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். வாரம் 1-2 முறை விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து குளித்தால் கூந்தல் உதிர்தல் குறைந்து அதன் வளர்ச்சி அதிகரிக்கும். முடி அடர்த்தியாக வளரும்.
கற்றாழை
தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வர அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
எலுமிச்சை
எலுமிச்சை பழ சாறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு குறைய தொடங்கும். செம்பட்டை முடி கருமை அடையும்.
வெந்தயம்
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்வு குறைந்து அடர்த்தி அதிகரிக்கும்.