சிம்ம ராசி குணங்கள்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதமும் அடங்கியுள்ளன. சிம்ம ராசியானது கால புருஷனின் இதயத்தை குறிப்பிடும் இரண்டாவது ஸ்திர ராசியாகும். சிம்ம ராசிக்கு பகலில்தான் வலு அதிகம். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக விளங்குகின்றன. சிம்ம ராசியின் அதிபதி ராஜகிரகமாகிய சூரியன் என்பதால், சகல சுகங்களுடன் ராஜபோகத்துடன் இருக்கவே விரும்புவார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சிந்தனை, சொல், செயல் என்று அனைத்திலும் வேகம் காட்டும் இவர்கள் அதற்கான பலனையும் உடனே எதிர்பார்ப்பார்கள். பின்னால் இருந்து கொண்டு குறை கூறுபவர்களையும், உடன் இருந்தே துரோகம் செய்பவர்களையும் இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. உணவு விஷயத்தைப் பொறுத்தவரை, சூடாகவும், சுவையாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேசும்போது கைகளையும், கண்களையும் அசைக்காமல் இருக்க முடியாது. முன்கோபம் அதிகம் உள்ளவர்கள், ஆனால் அனாவசியமாக கோபப்பட மாட்டார்கள். படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது.
இவர்களில் பெரும்பாலோனோர் படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இருக்காது. இவர்களுக்கு பெரும்பாலும் சுயதொழில்தான் சரியாக இருக்கும். சிலரை வைத்து வேலை வாங்கும் தொழில்தான் அமையும். பெயர், பணம், புகழ் ஒன்றாகக் கிடைக்கும் துறை அல்லது பதவியைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் வரை காத்திருந்து அதில் சேர்வார்கள். இவர்கள் வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் இருக்கும். அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் ஒருங்கே அமைய பெற்றவர்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணமுடையவர்கள். தற்புகழ்ச்சிக்கு அடிமையாவார் என்பதை புரிந்து கொள்ளும் உடனிருப்பவர்கள் இவர்களை புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்துக் கொண்டு பின்னால் திட்டுவார்கள். ஆனால் பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள். இவர்களின் அமைதியான தோற்றத்தை கண்டு ஏமாற்றிவிட இவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றி விட முடியாது.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள், வீண் சண்டைக்குப் போக மாட்டார்கள். ஆனால் சண்டை என்று வந்து விட்டால் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். அதிலும் தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களைந்த பின் தான் நிம்மதியடைவார்கள். முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்புக் கேட்பார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி விடுவார்கள். இவர்கள் பேச்சில் ஒரு தெளிவு இருக்கும். இவர்களில் பெரும்பலனோர்க்கு பண வசதிக்கு குறைவு இருக்காது.
இவர்கள் சரியான சந்தேக பேர்வழிகள். இவர்கள் செலவுகளை பற்றி கவலை பட மாட்டார்கள். பிறரிடம் கடன் வாங்குவது இவர்களுக்கு பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை சரியாக திருப்பி செலுத்தி விடுவார்கள். கோபம் அதிகம் கொண்டவர்கள், அதனால் பிறருடன் இணக்கமாக இருப்பது கடினம். இவர்களிடம் மிரட்டி வேலை வாங்குவதை விட அன்பாக பேசி வேலை வாங்குவது எளிது.
இந்த ராசிக்கு 2-ம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியாக புதன் வருவதால், பணத்துக்குக் சிறிதும் குறைவு இருக்காது. ஆனால், கையில் தங்காதபடி செலவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். புதன் பேச்சுக்கு அதிபதி என்பதால், யோசித்த அந்தக் கணமே பளிச்சென்று பேசுவார்கள்.
சுக ஸ்தானம் மற்றும் தாயார் ஸ்தானமாகிய 4-ம் இடத்துக்கும் பாக்கிய ஸ்தானம் மற்றும் தந்தை ஸ்தானமாகிய 9-ம் இடத்துக்கும் செவ்வாயே வருகிறார். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், பெற்றோர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். அவர்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்கு உண்டு.
5-ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கும், ஆயுள் ஸ்தானமாகிய 8-ம் இடத்துக்கும் குரு அதிபதியாக இருப்பதால் நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளைகள் பிறப்பார்கள். 6 மற்றும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி இருப்பதால், உங்களுடைய வாழ்க்கைத்துணை திறமைமிக்கவராக இருப்பார்.
சிம்ம ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்
சூரியன் சிவ கோத்திரத்தைச் சேர்ந்தவர். சிவனுடைய அம்சமாகவே சூரியன் விளங்குகிறார். சூரியன் நெருப்புக் குழம்பாகக் கொதிக்கும் ஒரு கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரியனுக்கு நிகராக உள்ள ஒரு தலமெனில் அது திருவண்ணாமலையே ஆகும். கொழுந்துவிட்ட அக்னியானது கருணையின் பொருட்டு இங்கு மலையாகக் குளிர்ந்துள்ளது. சிவனே மலையாகவும், மலையே சிவமாகவும் பிரிக்கமுடியாதபடி திருவண்ணாமலை விளங்குகிறது. சூரியன் எப்படி எல்லாவற்றுக்கும் மையமாக உள்ளதோ, அதுபோல பூமியினுடைய மையமாக திருவண்ணாமலை தலம் விளங்குவதாக ‘ஸ்காந்த புராணம்’ என்னும் நூல் கூறுகிறது.
ஏற்றம், ஏமாற்றம் என்ற மாறுபட்ட நிலையை இவர்கள் கடந்து எப்போதும் முன்னேற்றம் என்று உயர, அந்த உயரமான திருவண்ணாமலையையும், அருணாசலேஸ்வரரையும் வணங்கி வர வேண்டும். இதனால் இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.