மிதுன ராசி குணங்கள்
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவனாவார். மிதுன ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரம் 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்கள் 1, 2, 3 ஆம் பாதங்கள் ஆகியவை அடங்கியுள்ளன. ராசிகளில் மிதுன ராசி முதல் உபய ராசி ஆகும். மிதுன ராசிக்கு மேஷம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகள் நட்பாகவும் மற்றவை பகையாவும் உள்ளன. இவர்களின் ராசி அதிபதி புதன் ஆதலால், இந்த ராசிக்காரர்கள் கலைகளில் ஆர்வத்துடனும், வித்தைகளில் தேர்ச்சியுடனும் காணப்படுவார்கள்.
இரட்டையர்களைச் ராசி சின்னமாகக் கொண்ட மிதுன ராசியில் பிறந்த இவர்கள் எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் உடனிருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிவதற்காகக் காத்திருப்பீர்கள். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அழகான மீன் போன்ற கண்கள் இருக்கும். கண்களாலேயே கதை பேசுவார்கள். உயரமான உடலமைப்பு இருந்தாலும் ஒல்லியான தேகமே இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி வருவார்கள். இவர்களுக்கு பரந்த நெற்றியும், பிறரை வசீகரிக்க தக்க தனித்தன்மையும் இருக்கும். அடிக்கடி மனக் குழப்பம் இவர்களுக்கு உண்டாகும். நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.
எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், சமன் செய்து சீர் தூக்கும் துலா போல துல்லியமாக நீதி வழங்குவதில் வல்லவர்கள். நெருங்கிப் பழகிய நண்பர்களிடம் கூட உதவி கேட்கத் தயங்குவார்கள். அலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் செய்வார்கள். பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போகத் தெரியாது என்பதால், பதவி, சலுகைகள் பெறுவதில் சில தடைகள் ஏற்படலாம்.
இவர்களுக்கு மூத்த சகோதர, சகோதரிகளிடம் பாசம் இருந்தாலும், இளைய சகோதர ஸ்தானம் என்னும் 3-ம் இடத்துக்கு சூரியன் அதிபதியாக வருவதால், இளைய சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பு காட்டுவார்கள். இவர்களின் மூத்த சகோதர சகோதரிகள் எடுக்கும் முடிவுகள் இவர்களுக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சோம்பலாக இருப்பது இவர்களுக்கு அறவே பிடிக்காது. நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள் புரியும். சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும்.
இவர்கள் மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். பிறர் பார்வைக்கு கோமாளி போலவும், ஏமாளி போலவும் நடந்து கொண்டாலும் அனைவரிடமும் நயமாக பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்வார்கள். இவர்களின் வாக்கு ஸ்தானாதிபதி சந்திரன் என்பதால், வானத்தில் நிகழும் மாயாஜாலங்களைப் போல், இவர்களின் மனதிலும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இந்த ஸ்தானம் செலவுகளையும் சேமிப்புகளையும் குறிக்கும் என்பதால், இவர்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்கமுடியாது. பணத்தை தண்ணீர் போல செலவழிப்பார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்வார்களே அவ்வளவு எளிதில் அந்த தொடர்பை துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அதனால் அதிக சந்தோஷப்படுவார்கள். பிறரை கிண்டல், கேலி பரிகாசம் செய்வதில் மிகுந்த சாமர்த்தியசாலிகள். இவர்களுக்கு பேச்சாற்றல் அதிகம் இருக்கும். சமூக மற்றும் பொது வாழ்வில் ஈடுபாட்டோடு இருப்பார்கள். கலை, மற்றும் இசைத்துறையில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் ஆடம்பரமாக வாழ்வதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். எல்லா சுகங்களையும் பெற்று சுக போகமாக வாழ விரும்புவார்கள்.
இவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லப்படும் 5-ம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். எப்போதும் இறையருள் இவர்களுக்கு இருக்கும். இவர்களின் உத்தியோக ஸ்தானத்துக்கு அதிபதியாக குரு இருப்பதால், ஒரே இடத்தில் நீண்ட காலத்துக்கு இவர்களால் பணி புரிய முடியாது. எங்கேயும் தேங்கி நின்று விடாமல், இவர்களின் பயணம் தொடரும். இவர்களில் சிலர் சுயதொழில் செய்யவும் வாய்ப்புகள் உண்டு. எனினும், தொழில் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து மற்றொரு இடத்தில் பணம் சம்பாதிக்க நேரிடும்.
மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்
மிதுனம் என்பதே இரட்டையர்கள் என்று முன்பே பார்த்தோம். இவர்களின் ராசியாதிபதி புதனாக வருவதால், பெரும்பாலும் பெருமாள் கோயில்கள் இவர்களுக்கு ஏற்றவையாக அமையும். அதிலும், ஒரே தலத்தில் இரட்டைப் பெருமாள் அருளும் தலமாக இருந்தால் அது மிகவும் விசேஷம்.
அவ்வகையில் மிதுன ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய திருத்தலம் திருத்தொலைவில்லி மங்கலம். இந்த திருத்தலம் திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. நூற்றெட்டு திவ்யதேசங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான்.
இந்த இரு கோயில்களையும் நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். முதலாவதான திருப்பதியில் எழுந்தருளும் பெருமாளின் திருப்பெயர் தேவப்பிரான் ஆகும். இரண்டாவதான திருப்பதியில் அருளும் பெருமாளின் நாமம் அரவிந்தலோசனன் என்பதாகும். சேர்ந்தே அருளும் இருவரையும் தரிசித்து வாருங்கள்; எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும்.