களத்திர தோஷம் என்றால் என்ன?
ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஒன்றுடன் ஒண்டு சேர்ந்திருந்தாலோ அது களத்திர தோஷம் எனப்படுகிறது.
களத்திரம் என்ற சொல்லானது திருமணமான பெண்ணுக்குக் கணவனையும், ஆணுக்கு மனைவியையும் குறிக்கும் சொல்லாகும். களத்திர ஸ்தானம் என்பது லக்னத்திற்கு 7வது இடத்தைக் குறிக்கும் இடமாகும். இந்த முக்கியமான 7ம் வீடானது பாவக் கிரகங்களால் பாதிக்கபட்டு இருக்கக்கூடாது.
களத்திர தோஷத்தை எவ்வாறு அறிவது?
4-ம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், 2,7ம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவக் கிரகங்களுடன் சேர்ந்து 6,8,12-ம் இடத்தில் இருந்தாலும் அந்த ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது என அர்த்தமாகும். மேலும் சுக்கிரனுடன் சூரியன், சனி அல்லது ராகு, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7-ம் இடம் பாவக் கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், அது பாதகமான களத்திர தோஷம் ஆகும்.
களத்திர தோஷம் எதனால் ஏற்படுகிறது?
களத்திர தோஷம் ஏற்பட முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளே காரணம் ஆகும். முற்பிறவியில் செய்த ஏதேனும் ஒரு தீய செயலை பொருத்து இந்த களத்திர தோஷமானது ஏற்படுகிறது.
களத்திர தோஷம் என்ன செய்யும்?
களத்திர தோஷம் கொண்டவர்களுக்கு திருமணம் தாமதமாக நடக்கும், இல்லை திருமணமே நடக்காமல் போகவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. திருமணம் நடந்தாலும் திருமண வாழ்வில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
திருமண வாழ்வில் கணவன் மனைவிக்கிடையே அதிக போராட்டங்கள் ஏற்படும். தம்பதியர்களிடையே ஒற்றுமை இருக்காது. எதிலும் எலியும், பூனையுமாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகும் குணம் இருக்காது.
களத்திர தோஷத்திற்கான நிவர்த்தி / பரிகாரம்
களத்திர தோஷம் கொண்டவர்கள் அதே போன்று போன்று ஜாத அமைப்புள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்வு சிறப்பாக அமையும். இந்த தோஷம் உள்ளவர்கள் அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் களத்திர தோஷம் கொண்ட திருமணம் அமையாமல் தவிப்பவர்கள் சுக்கிர பகவான் ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் வீட்டில் சுமங்கலி பூஜை செய்தால் நற்பலன்களை ஏற்படும்.
அதே போல களத்திர தோஷம் தீர்க்கும் கோயில்கள் பல இருக்கின்றன. மிக முக்கியமாக, குருவின் ஆதிக்கம் நிறைந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது நன்மைகளைத் தரும். வளம் சேர்க்கும். பலம் தரும். குரு பலம் கூடி வந்தாலே களத்திர தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
திருமண பரிகார திருத்தலம் என்று போற்றப்படுகிற தலம் திருமணஞ்சேரி. இது கும்பகோணம் ஆடுதுறை அருகில் உள்ள அற்புதமான திருத்தலம். ஒருமுறை இங்கு சென்று இறைவனையும் அம்பாளையும் வணங்கி வந்தாலே, திருமண பாக்கியம் விரைவில் கைக்கூடி வரும்.