21 தலைமுறை சாபங்களை போக்கும் ருத்ர கயா
அமாவாசை தினத்தன்று முன்னோர் வழிபாடு செய்வதன் மூலமாக பித்ரு சாபம் எதுவும் இருந்தால் அவை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இந்நிலையில், 21 தலைமுறையினரின் சாபங்களை போக்கும் ருத்ர கயா எங்கே இருக்கிறது என்றும், அதன் சிறப்பு, பலன்கள் குறித்தும் பார்க்கலாம்.
ருத்ர கயா எங்கே இருக்கிறது?
பீஹார் மாநிலத்தில் உள்ள கயாவில் விஷ்ணு பாதத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து வழிபடுவதால் முன்னோர்களுக்கு மோட்சத்தை கொடுக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
கயாவில் விஷ்ணு பாதம் இருப்பதுபோல், தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்ய சுவாமி கோயிலில் ருத்ர பாதம் உள்ளது.
இத்தலத்தின் வட ஆல விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ர பாதத்தில், பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து வழிபட முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதால் இத்தலம் ருத்ர கயா எனப்படுகிறது.
ருத்ர கயாவின் சிறப்புகள்
விஷ்ணு கயாவில் வழிபட்டால் 7 தலைமுறையினர்களின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஆனால், திருவெண்காட்டிலுள்ள ருத்ர கயாவை வழிபட்டால், விஷ்ணு கயாவை விட 3 மடங்கு 21 தலைமுறையினர்களின் பித்ரு சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
பித்ருக்களுக்கு தர்ப்பணம், பிண்டம் வைத்து வழிபட அமாவாசை தினம் சிறப்பானது என்றாலும், ருத்ர கயாவில் ஆண்டு முழுவதும் பிண்டம் வைத்து வழிபட சிறப்பானது என்று கூறப்படுகிறது.
சந்திர தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ர பாதம் என்ற இடத்தில் வரையப்பட்டுள்ள சிவபெருமானின் திருவடிகளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
அதனால், நாடு முழுவதும் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்.
காசிக்கு சமமான 6 ஸ்தலங்களில் திருவெண்காடு ஒன்றாகும். இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், ஸ்தல விருட்சம் என எல்லாமே மூன்று மூன்றாக உள்ளது.
நவக்கிரகங்களில் புதனுக்குரிய இந்த ஸ்தலத்தில், சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஒன்றான அகோர மூர்த்தியை திருவெண்காடு ஸ்தலத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாது.
சிதம்பரத்தை போன்றே நடராஜ சபையும், இரகசியமும் உள்ளது.
மேலும், பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பலன்கள்
வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு போன்றவைகள் கிடைத்திட பலரும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
இங்கு வந்து வழிபட பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி, திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கிறது.