பாயில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்
வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கை முறையில் பல விதமான நவீன படுக்கைகள் வந்துவிட்டன. அதோடு சேர்ந்து பல்வேறு நோய்களும் வந்துவிட்டன. பாய் போட்டு உறங்கும் வழக்கத்தை பலரும் மறந்துவிட்டனர். கட்டில் நவீன மெத்தையில் படுத்து உறங்குவதையே பலரும் விரும்புகின்றனர்.
“பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்” என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப தாவரங்களில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்து உறங்குவது நமக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் பலவித மருத்துவ குணங்களையும் கொடுக்கிறது.
பாயில் படுத்து உறங்குவதால் உடல் சூட்டை சம அளவில் வைத்துக் கொள்ள முடியும். மேலும் விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.
மேலும் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் ஓடும் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் வளரும் கோரைப்புற்களால் பாய்கள் அதிகம் நெய்யப்படுகிறது. இப்பாய்கள், 100 முதல் 140 பாவுப் பருத்தியையும், பட்டு இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்றன.
இயற்கை முறைகளில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
பாய்களின் வகைகள்
- கோரைப் பாய்,
- ஈச்சம் பாய்,
- தாழம் பாய்,
- நாணல் கோரை பாய்,
- பிரம்பு பாய்,
- பேரிச்சம் பாய்,
- மூங்கில் பாய்.
பாயில் படுத்து உறங்குவதால் உண்டாகும் நன்மைகள்
- நம் உடலில் உள்ள எலும்பு, தசைகள் தொடர்பான பிரச்சினைகள் குறைகின்றன. உடலின் ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்கு நல்ல உற்சாகத்தைத் தரக்கூடியது.
- பாயில் உறங்குவது கிட்டத்தட்ட யோகாசனம் செய்தது போன்ற நன்மையைத் தரக்கூடியது.
- தரையில் பாய் விரித்துப் படுப்பதன் மூலம், நம் உடலில் புவியீர்ப்பு விசையானது சீராகப் பரவுகிறது.
- பாய் நமது உடல் சூட்டை உள்வாங்கக்கூடியது.
- கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி, முதுகு வலி ஏற்படுவதை தடுக்கலாம்.
- பாயில் உறங்கும் பழக்கமுடைய பெண்களுக்கு சுகப் பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு.
- பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுளுக்கு பிடிக்காது, குழந்தையின் முதுகெலும்பு சீர்பட்டு குழந்தை வேகமாக வளர உதவிடும்.
- கல்வி கற்கும் மாணவ மாணவிகள் பாயில் உறங்கினால் இளம் வயது கூண் முதுகு விழாது.
- பெரும்பாலான முதியோர்கள் தரையில் பாய் விரித்து உறங்குவதே அதிகம் விரும்புவார்கள் அதன் காரணம் 60 வயதிற்கு மேல் உடலில் இரத்த ஓட்ட பிரச்சினை இருக்கும். ஆகையால் பாயில் சமமாக கால் கையை நீட்டி மல்லாக்க படுக்கையில் உடல் எங்கும் இரத்தம் சீராக பாய்ந்து கொழுப்பை குறைக்கிறது.
- ஞாபக சக்தியைப் பெருக்கி உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தந்து நீண்ட நாள்கள் சீரும், சிறப்புமாக வாழ வழிவகுக்கும்.
- இரும்பு மரக் கட்டிலில் “பிளாஸ்டிக் போம்” மெத்தையில் உறங்குவதை விட வெறும் தரையில் இயற்கையாக தயாரிக்கப்படும் பாய்களில் படுத்து உறங்குவது நம் உடலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.