உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க
பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட… கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு…
1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடிக்கொண்டு தாய் மடியில் விழித்திருக்கும் குழந்தையை அமர வைத்து இடமிருந்து வலமாக மூன்று தடவையும் வலமிருந்து இடமாக மூன்று தடவையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணீரில் போட வேண்டும். தண்ணீரில் உப்புக் கரைய கரைய திருஷ்டியும் கரைந்து காணாமல் போய்விடும்.
2. குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு அதனால் சாப்பிடாமல் மெலிந்து போகும், அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுதல் பழக்கம்.
3. திருஷ்டியின் தாக்கத்தால் குழந்தை கீழே விழுந்து அடிபட்டு விட்டால் உடனே கீழே கிடக்கும் செங்களல் துண்டு அல்லது மண்ணாங்கட்டியால் குழந்தையின் தலையை மூன்று முறை சுற்றி தூக்கிப் போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கலாம். இது கூட திருஷ்டி கழிக்கும் முறை தான்.
4. கொஞ்சம் பெரிதான குழந்தைக்கு, சோறு ஊட்டிய பின்னர் தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை கைகழுவ வைத்து அதை சுற்றிப் போடலாம். சாப்பிடப் போகும் முன் ஒரு உருண்டை சாதத்தை தட்டில் ஓரமாக எடுத்து வைத்து அந்த உணவை காகத்திற்கு போட செய்யுங்கள். இதுவும் ஒரு பரிகாரமே. இது நல்ல விளைவுகளைத் தரும்.
5. இன்னும் சில வீடுகளில் கடுகு, மிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்கார வைத்து,” ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்தக் கண்ணு, இந்தக் கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும்!” என்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள். இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரம் தான்.
இப்படியாகக் குழந்தைகளுக்குப் பல வகையில் திருஷ்டி சுற்றிப் போடலாம்.
எனினும், சாஸ்திரங்களின் அடிப்படையில் தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழிப்பது என்பது மகா பாவம். அதை மட்டும் செய்யாதீர்கள். அப்படியாகச் செய்யும் பட்சத்தில், அது எதிர்மறை விளைவுகளைக் கூடத் தந்து விடலாம். தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றினால் ஆயுள் குறையும் என்று கூட சொல்லப்படுகிறது. அதாவது அது திருஷ்டி சுற்றும் நோக்கத்தையே பாதிப்படையச் செய்யும். அத்துடன் எதிர்மறை விளைவுகளையும் தர வல்லது. திருஷ்டி சுற்றுவது மட்டும் அல்ல, குளிக்க ஊற்றுவது, அலங்காரம் செய்து அழகு பார்ப்பது என எல்லாமே குழந்தை விழித்திருக்கும் நிலையில் தான் செய்தல் வேண்டும்.
குழந்தைக்கு கருப்பு திருஷ்டிப் பொட்டு வைக்கலாம். இது எல்லோராலும் செய்யக் கூடியதே. அது அனுபவத்தில் அதிக அளவில் பயன் தரும் விஷயமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப் பொட்டு குழந்தையின் திருஷ்டியைப் போக்க வல்லது.